டி.ஆர்.ரமேஷ்

 
தமிழகம்

திமுக ஆட்சியில் கூட இப்படியொரு கொடுஞ்செயல் நடைபெறவில்லை: தமிழக அரசுக்கு ஆலய வழிபடுவோர் சங்கம் கண்டனம்

கரூரில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் பத்திரப்பதிவுக்கான தடை நீக்கம் விவகாரம்

செய்திப்பிரிவு

சென்னை: கரூரில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரை வார்க்கும் விதமாக பத்திரப்பதிவுக்கான தடையை நீக்கியுள்ள விவகாரத்தில், இப்படியொரு நம்பிக்கை துரோகம், கொடுஞ்செயல் கடந்த திமுக ஆட்சியி்ல்கூட நடைபெறவில்லை என தவெக அரசுக்கு ஆலய வழிபடுவோர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 214.29 ஏக்கர், புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான 204.52 ஏக்கர், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான 132.49 ஏக்கர் மற்றும் வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2533.65 ஏக்கர் என ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் மொத்தம் 3084.95 ஏக்கர் நிலங்கள் உள்ளன.

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ள இந்த 3084.95 ஏக்கர் நிலங்களையும் தனிநபர்களின் பெயர்களி்ல் பத்திரப்பதிவு செய்து கொடுக்கக்கூடாது என அறநிலையத்துறை ஏற்கெனவே தடை விதித்திருந்தது.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு பணி வழங்குவதற்காக தமிழக முதல்வர் விஜய் ஜூலை 10 அன்று கரூர் சென்றநிலையில், அதற்கு ஒரு நாள் முன்பாக 9-ம் தேதி கரூரில் உள்ள இந்த 4 கோயில்களுக்கு சொந்தமான ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள இடங்களை ஆக்கிரமிப்பாளர்களின் பெயர்களில் பத்திப்பதிவு செய்து கொடுக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி.விஜய் உத்தரவிட்டிருந்தது பெரும்சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அறநிலையத்துறை ஆணையரின் இந்த நடவடிக்கைக்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இதுதொடர்பாக ஆலய வழிபடுவோர் சங்கத்தலைவரான மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியதாவது:

கரூரில் உள்ள 4 கோயில்களுக்கு சொந்தமான ரூ. 25 ஆயிரம்கோடி மதிப்புள்ள சொத்துகளை தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது கோயில் நலனில் அக்கறை கொண்ட யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமம். தவெக அரசு இதை நிர்வாக சீர்திருத்தம் எனக்கூற முயற்சிக்கிறது. உண்மையில் இது

கோயில்களுக்கும், அந்த கோயில்களை வணங்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கும் செய்யும் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். இந்த நிலங்களை தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்வதற்கான தடையை நீக்கி தவெக அரசு சாதனை படைத்திருப்பது வெட்கக்கேடா னது. வேதனைக்குரியது.

இப்படியொரு துரோகம், கொடுஞ்செயல் கடந்த திமுகஆட்சியில் கூட நடைபெறவில்லை. லஞ்சம் கேட்டால் என் பெயரைச் சொல்லுங்கள் எனக்கூறும் முதல்வர் விஜய், முதலில் இந்த உத்தரவை வாபஸ் வாங்கி ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோயில் சொத்துகள் சூறையாடப்படுவதை ஒருபோதும் வேடிக்கை பார்க்க மாட்டேன் என்பதை நிரூபிக்கட்டும்.

இது கடைத்தேங்காயை எடுத்துவழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக இருக்கிறது. ஜூலை 10-ம் தேதி முதல்வர் விஜய் கரூர் செல்கிறார் என்பதற்காக இதுதொடர்பாக அறநிலையத்துறை திருப்பூர் இணை ஆணையரும், கரூர் மாவட்ட ஆட்சியரும் தங்களது பரிந்துரை கடிதங்களை 9-ம் தேதி காலையில் அறநிலையத்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அந்த கடிதங்களை ஏற்று ஆணையரும் அன்றைய தினமே மின்னல் வேகத்தில் செயல்பட்டு தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்கிறார். கோயில் சொத்து விவகாரத்தில் அசுர வேகத்தில் உத்தரவு பிறப்பித்து இருப்பதன் பின்னணி என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதன்மூலம் தமிழக அரசே கோயில்சொத்துகளின் ஆக்கிரமிப்புகளை சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறது.

இதேபோல ஆக்கிரமிப்பில் உள்ள கரூர் வெண்ணைமலை கோயிலுக்கு சொந்தமான 500 ஏக்கர் நிலத்தையும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க வேண்டும்.கோயில் சொத்துகளை பாதுகாக்கும் அதேநேரம் நிலமற்ற ஏழைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவுவதை உறுதிசெய்ய வேண்டும்.

குறிப்பாக தமிழக அரசு, ஆக்கிரமிப்பாளர் களின் தேர்தல் கணக்குக்கு செவிகொடுக்காமல் நீதி, சட்டத்துக்கு மட்டும் செவி சாய்க்க வேண்டும். எனவே கரூர் கோயில்கள் விவகாரம் தொடர்பான உத்தரவைமுதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு உடனடியாக திரும்பப்பெறாவிட்டால் ஒட்டுமொத்த இந்து அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT