தமிழகம்

கோயில் சொத்து பாதுகாப்பு விவகாரம்: அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ‘கோயில் சொத்துகளைப் பாதுகாக்க சம்பளம் பெறும் அதிகாரிகள், தங்கள் பணிகளை முறையாகச் செய்வதில்லை’ என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

          

அதில், ‘இந்தக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கையில் சிக்கியுள்ளது. அதை மீட்க அறநிலையத் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோயில் நிலங்களில் உள்ள கனிம வளங்களும் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. எனவே கண்ணனூர் மாரியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, பக்தர்களின் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்த வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அமர்வு, ‘தனிநபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்த கோயில் சொத்துகளை மீட்க இணை ஆணையர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவரை நியமித்து, எடுத்த நடவடிக்கைகள் குறித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு ஏதுவாக அடுத்த விசாரணையின்போது அறநிலையத்துறை தரப்பில் சேலம் இணை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தனர்.

SCROLL FOR NEXT