சென்னை: தமிழகத்தில் வெப்ப நிலை நாளை (மார்ச் 8) வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (மார்ச் 8) நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டதின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மார்ச் 9-ம் தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களிலும், 10-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 11-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 12, 13 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை, வழக்கத்தை விட ஒரு சில இடங்களில் நாளை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.