கோப்புப் படம் 

 
தமிழகம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு

மு.வேல்சங்கர்

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று (ஜூலை 7) முதல் ஜூலை 11-ம் தேதி வரை 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானியும், உயரதிகாரியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் பார்வூட், செருமுள்ளி, வூட் பிரையர் எஸ்டேட், தேவாலைவில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

தெற்கு குஜராத்திலிருந்து மத்திய கேரளா வரை சராசரி கடல் மட்டத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக, ஜூலை 7-ம் தேதி முதல் ஜூலை 9-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 10-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 11-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூலை 12, 13 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

ஜூலை 7-ம் தேதி முதல் ஜூலை 11-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் (ஜூலை 7, 8) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தென் தமிழக கடலோரப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதி, வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதி, தென்மேற்கு வங்கக் கடலின் சில பகுதி, அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூலை 11-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசும்.

இதுதவிர, கொங்கன் - கோவா கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி, மத்திய அரபிக்கடலின் அநேக பகுதி மற்றும் தெற்கு அரபிக்கடலின் சில பகுதி, கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதி, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு பகுதிகளில் ஜூலை11-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்றுவீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்படி தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT