சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் (26, 27-ம் தேதி) தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சிமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.