தமிழகம்

கும்மிடிப்பூண்டி அருகே தொழில்நுட்ப கோளாறு: ரயில் சேவை பாதிப்பால் பயணிகள் கடும் அவதி

மு.வேல்சங்கர்

சென்னை: கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே கும்மிடிப்பூண்டி அருகே தொழில்நுட்ப கோளாறால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் அவதியடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை இடையே கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே இன்று (வியாழக்கிழமை) காலை 5.30 மணி அளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், புறநகர் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

பொன்னேரி ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்காக காத்திருந்த பயணிகள்.

இது தொடர்பாக, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் ரயில்வே பொறியாளர்கள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து, சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், மின்சார ரயில்கள் மாற்று பாதை வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டது. இதுபோல, சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இயக்கப்பட்ட ரயில்கள் மெதுவாகவே இயக்கப்பட்டன.

இருப்பினும், காலை நேரத்தில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் சிரமத்தை சந்தித்தனர்.

இதற்கிடையில், தொழில்நுட்ப கோளாறு காலை 9.40 மணி அளவில் சரி செய்யப்பட்டது. அதன் பிறகு, மின்சார ரயில் சேவை சீரானது. சுமார் 4 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், காலை நேர வேலைக்கு சென்ற பயணிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.

SCROLL FOR NEXT