திருவாரூர்: தமிழகத்தில் உள்ள அரசு நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட புத்தகங்கள் தொடர்பாக, குறிப்பாக அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்கள் வெளியிட்ட புத்தகங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு நூலகங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை நூலகக் குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களுக்கு அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்கள் மூலம் விநியோகிக்கப்பட்ட புத்தகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர்கள் தரப்பில் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, ஏஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஏற்கெனவே வெளியான பல்வேறு புத்தகங்களின் உள்ளடக்கங்களை மாற்றுத் தலைப்புகளில் புதிய புத்தகங்களாக வெளியிட்டுள்ளதாகவும், அவற்றில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தவறாகவும், நம்பகத்தன்மையற்றதாகவும் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, தமிழக அரசு இந்த இரு பதிப்பகங்களிலிருந்து நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட புத்தகங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, அவற்றை நூலகங்களிலிருந்து அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் மற்றும் அவருக்குச் சொந்தமான அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரும் சோதனை நடத்தினர்.
இந்தச் சூழலில், தமிழ்நாடு சட்டப்பேரவை நூலகக் குழுத் தலைவர் ஜோதிமணி தலைமையில், குழு உறுப்பினர்களான அருள் விக்னேஷ், கருப்பையா, கபில், கடற்கரை ராஜ், திலீபன் ஜெய்சங்கர், ஆர்.எஸ். முருகன், மோகன், நாவல்பட்டு விஜி, ஜெயராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு குழுவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் இடம்பெற்று இருந்தார்.
முதற்கட்டமாக திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் வாசகர்களுடன் குழுவினர் கலந்துரையாடி ஆய்வைத் தொடங்கிய குழுவினர், தொடர்ந்து விளமல் மற்றும் அம்மையப்பன் ஊராட்சி நூலகங்கள், ஊர்குடி பகுதிநேர நூலகம் ஆகியவற்றிலும் ஆய்வு செய்கின்றனர்.
இந்த ஆய்வின்போது, சர்ச்சைக்குரிய பதிப்பகங்களிலிருந்து பெறப்பட்ட புத்தகங்களின் விவரங்கள், அவற்றின் எண்ணிக்கை, கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பான பதிவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.