சென்னை: ஒரே நேரத்தில் விடைத்தாள் மதிப்பீடு, தேர்தல் பணிகளை மேற்கொள்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்.6-ம் தேதி முடிவடைந்தது. மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏப்.9-ம் தேதி தொடங்கியது. இந்த பணிகளில் அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஏப்.15-ம் தேதி பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் விடைத்தாள் மதிப்பீடு, தேர்தல் பணிகளை மேற்கொள்வதால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரி யர்கள் சிலர் கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி விடைத்தாள் மதிப்பீட்டை ஏப்.20-க்குள் முடிக்க திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். இந்நிலையில் சில மாவட்டங்களில் தேர்தல் சார்ந்த பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதில் இருந்து விடுவிக்கப்பட்டு, பூத் சிலிப் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள மையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் அவற்றை திருத்தி முடிக்க முடியாது என்பதுடன், இதர ஆசிரியர்களுக்கும் பணிச்சுமை ஏற்படும். மேலும், இரு பணிகளிலும் தொடர்ந்து ஈடுபடுவதால் ஆசிரியர்களிடம் தேவையற்ற குழப்பத்தை உருவாக்கியுள்ளது. எனவே இதற்கு மாற்று ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.