துரை வைகோ | கோப்புப் படம்
சென்னை: மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நெல்லை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமளவு மக்காச்சோள சாகுபடி நடைபெறுகிறது. மக்காச்சோளத்துக்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு சதவீத செஸ் வரியை நீக்க வேண்டும்.
சந்தையில் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். உற்பத்தி செலவு குவிண்டாலுக்கு ரூ.2,000–2,200 என இருக்கும் நிலையில், தற்போது விலை ரூ.1,700–1,800-க்கு வீழ்ந்துள்ளது. இந்த இழப்பை ஈடுசெய்ய, தமிழக அரசு ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.250 மானியம் வழங்கினால், நஷ்டத்தில் அரசு பங்கேற்பதாக அமையும்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில், சந்தை தலையீட்டுத் திட்டம் மூலம் குவிண்டாலுக்கு ரூ.2,150 வரை விலை உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. சந்தை விலை ரூ.1,900-க்கு கீழே சென்றால், அதிகபட்சம் 50 குவிண்டால் வரை ரூ.250 இழப்பீடு வழங்கப்படுகிறது. அதேபோல, ஆந்திரா, தெலங்கானா, கேரளா போன்ற மாநிலங்களும் பல்வேறு வழிகளில் மக்காச்சோள விவசாயத்தை ஊக்குவித்து, விவசாயிகளைப் பாதுகாத்து வருகின்றன.
எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணை உள்ளத்துடன் இந்த விஷயத்தைப் பரிசீலித்து, மக்காச்சோளத்துக்கு உரிய மானியம் வழங்குவதுடன், விவசாயிகளைப் பாதுகாக்க நடவடிக்கை வேண்டும். இவ்வாறு துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.