தமிழகம்

வரி வசூலில் காட்டும் வேகத்தை உள்கட்டமைப்பை வழங்குவதில் காட்டுவது இல்லை: சென்னை ஐகோர்ட் அதிருப்தி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பொதுமக்கள் வரி செலுத்தத் தவறினால் உடனடியாகச் சேவையைத் துண்டிக்கும் அதிகாரிகள், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பை வழங்குவதில் அதே வேகத்தைக் காட்டுவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டை எல்லை அம்மன் காலனி பகுதியில் உள்ள சாலையில் சட்டவிரோத வாகன நிறுத்தமிடம் மற்றும் அனுமதி பெறாத ஒர்க்‌ஷாப்பை அகற்றக்கோரி சாஜு அலெக்ஸ் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘சொத்து வரி, குடிநீர் வரி, லைசென்ஸ் கட்டணம் போன்றவற்றை மாநகராட்சி உயர்த்திக் கொண்டே போகும்போது பொது மக்களுக்கு சாலை வசதி, ஆக்கிரமிப்பில்லாத நடைபாதைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க வேண்டியது அதிகாரிகளின் கடமை.

பொதுமக்கள் வரி செலுத்தத் தவறினால் உடனடியாகச் சேவையைத் துண்டிக்கும் அதிகாரிகள், மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பை வழங்குவதில் அதே வேகத்தைக் காட்டுவதில்லை’ என கண்டனம் தெரிவித்தனர்.

சென்னை நகரில் ஆக்கிரமிப்பில்லாத நடைபாதைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ​வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபர் 26-ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT