சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு மது வகைகளை அனுப்பும் நடைமுறையில் இன்று முதல் மாற்றம் செய்யப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் அனுப்பிஉள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு கடையிலும் மது வகைகளின் தேவை மற்றும் எந்த வகையான மதுபானம் அதிகளவில் கேட்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் மதுபாட்டில்களை கொள்முதல் செய்ய வேண்டும். அனைத்து மதுபான விநியோகஸ்தர்களின் மதுபானங்களையும் சமமாக பிரித்து கடைகளுக்கு அனுப்பும் தற்போதைய நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.
புதிய நடைமுறையை இன்று முதல் மூத்த மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், கிடங்கு மேலாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்தப் புதிய மாற்றத்தின் மூலம் கடைகளில் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கும் மதுபானங்களின் அளவு பெருமளவு குறையும். அதேநேரத்தில் அதிக தேவையும், வரவேற்பும் கொண்ட பிரபல மது பிராண்டுகள் தடையின்றி வாடிக்கையாளர்களுக்கு தாராளமாக கிடைக்கப் பெறும். எனவே, மதுபானங்களை டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பும் புதிய நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.