சென்னை: டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் செஸ் வரி வசூலிப்பது குறித்து வணிக வரித்துறை, அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், இது தொடர்பாக மதிப்பு கூட்டப்பட்ட வரி சட்ட விதிகளில் திருத்தம் செய்ய அரசு பரிசீலித்து வருவதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் வகையில், மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, டாஸ்மாக் நிர்வாகம் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அமல்படுத்தி வருகிறது. இதன்படி, மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில், 10 ரூபாயை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி வழங்கப்படுகிறது.
இது தொடர்பான வழக்கில், மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, மாற்றி அமைக்க, புதிதாக பொறுப்பேற்று உள்ள அரசு முடிவு செய்துள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில், பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாயை தனியாக வசூலிப்பதற்கு பதிலாக, அந்தத் தொகையை மதுபானத்தில் அதிகபட்ச விற்பனை விலையுடன் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘பாட்டில்களை திரும்பப் பெறுவது, மறு சூழற்சி செய்வது போன்ற பொறுப்புகளை, சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வசமே ஒப்படைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, உரிய சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள, மதுவிலக்கு துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.
‘மதுபானங்களின் அதிகபட்ச விற்பனை விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் செஸ் வரி விதிக்க, அரசுக்கு வணிகவரித் துறை ஆணையர் கருத்துரு அனுப்பி உள்ளார். இது சம்பந்தமாக, மதிப்பு கூட்டு வரி சட்ட விதிகளில் திருத்தங்கள் செய்ய, அரசு பரிசீலித்து வருகிறது’ என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை, ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.