சென்னை: டாஸ்மாக் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பணியாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையைவிட, கூடுதலாக வசூலிக்கப்படுவதாக நீண்டகாலமாக புகார்கள் இருந்து வருகின்றன.
இந்தக் கூடுதல் வசூல் முறையை முடிவுக்கு கொண்டு வர அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனிடையே டாஸ்மாக் கடைகளின் பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றை கடை பணியாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதால் தான் கூடுதல் தொகை வாங்குவதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற மதுவிலக்குத்துறை மானிய கோரிக்கையின் போது, டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, கடைகளின் பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றை அரசே ஏற்கும் என அறிவித்து, இனி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
இந்நிலையில், ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு பிறகும் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூலிப்பது உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க புதிய புகார் சேவை மையமும் தொடங்கப்பட்டது.
இந்த மையத்துக்கு வந்த புகார்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் 217 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குன்றத்தூர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளிலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை நேற்றும், நேற்று முன்தினமும் அடைத்து, மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் முன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்த ஆகும் செலவுகள், உடையும் பாட்டில்களுக்கு இழப்பீடு, கடை வாடகை உள்ளிட்டவற்றை வழங்குவது குறித்து நிர்வாகம் தரப்பில் எதுவும் கூறவில்லை.
மேலும் பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்வதற்கு தாசில்தார் கடைகளுக்கு சென்று ஆய்வு செய்து தான் நடவடிக்கை எடுக்க முடியும், புகார்களின் அடிப்படையில் எவ்வித விசாரணையுமின்றி சஸ்பெண்ட் செய்துள்ளனர். இந்த நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என பணியாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், ‘‘மூடப்பட்ட கடைகளை தற்காலிக மாற்று பணியாளர்களை கொண்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில கடைகள் நேற்றைய தினமே திறக்கப்பட்டது. கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.