தமிழகம்

டாஸ்மாக்கில் 2 நாளில் ரூ.441 கோடி வசூல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில் 2 ஆயிரத்துக்கும் அதிமான கடைகளில் மது அருந்தும் பார்கள் உள்ளன. டாஸ்மாக் மதுக்கடைகளை பொறுத்தவரை தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெறும்.

சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், மற்ற பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வந்ததால் பெரும்பாலானோருக்கு சனி, ஞாயிறு என 2 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, திங்கட்கிழமையில் வந்ததால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்களில் ரூ.789 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. இந்தாண்டு நவ.7, 8 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளில் ரூ.441.38 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை ரூ.234.75 கோடிக்கும், தீபாவளி நாளில் தமிழகம் முழுவதும் ரூ.206.63 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றது.

மேலும் இரண்டு நாட்களில் சென்னை மண்டலத்தில் ரூ.95.85 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.98.97 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.88.38 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.87.52 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.70.66 கோடிக்கும் மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

ரூ.54 கோடி குறைவு: கடந்த ஆண்டு தீபாவளி நாளில் ரூ.260 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில் இந்தாண்டு 20 புதிய மது வகைகள் மற்றும் 4 புதிய பீர் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டும், தீபாவளி நாளில் ரூ.206 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது ரூ.54 கோடி குறைவு. சென்னை மற்றும் மதுரைமண்டலத்தில் அதிக அளவில் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் மழையின் காரணமாக அந்த பகுதிகளில் விற்பனை குறைந்ததாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT