தமிழிசை
தென்காசி: “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளித்த திமுகவுக்கு நன்றி” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே சிவசைலத்தில் வாமா அறக்கட்டளை சார்பில் சனிக்கிழமை சங்கமத்தின் 200-வது வார விழாவில் பங்கேற்ற தெலங்கான மாநில முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், செய்திளாளர்களிடம் கூறியது: “மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட உள்ளது மகிழ்ச்சியான செய்தி. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்றச் செல்லும் நேரத்தில் இந்த வெற்றிச் செய்தி வந்துள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதா மட்டுமின்றி, பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதாவும் நிறைவேற்றப்பட உள்ளது. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கழித்து பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கப் போகிறது. தமிழகத்துக்கு அதிகமான மக்களவை உறுப்பினர்கள் கிடைக்க உள்ளனர்.
மாற்றுக் கருத்துகள் உள்ள கட்சிகள் கூட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளித்திருப்பதற்கு நன்றி. இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு அளித்துள்ளது. கொள்கை வேறுபாடு இருந்தாலும் நாட்டுக்கு வளர்ச்சி அளிப்பதிலும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் எல்லா கட்சிகளும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தமிழகத்திலும் தாமர மலர வேண்டும். அதற்கான சாத்தியம் உள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவில் சில மாற்றங்களை திமுக கேட்டது. அந்த மாற்றங்களை செய்தவுடன் அவர்கள் ஆதரவு தருகிறார்கள். மற்றபடி கட்சிகளிடையே உறவு குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். தொகுதி மறுவரையறை மசோதா விஷயத்தில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.