விஜய்யின் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை ஆதரிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தமிழக பாஜக தேர்தல் அலுவலகத்தில், 234 சட்டப்பேரவை தொகுதிகளில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் அடங்கிய தேர்தல் அறிக்கை பெட்டிகளை, பாஜக மாநில நிர்வாகிகளிடம் தேர்தல் அறிக்கை குழு தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வெறும் குளிர்சாதன அறைகளில் அமர்ந்துகொண்டு, எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன தேவைகள் என்பது கூடத் தெரியாமல், மேம்போக்காக ஒரு தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் வழக்கம் எங்களுடையதல்ல.
நேரடியாக மக்கள் மன்றத்துக்கே சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுள்ளோம். இதற்காக, மாவட்டம் தோறும் ‘கோரிக்கை பெட்டிகளை’ வைத்து மக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுள்ளோம்.
தமிழக அரசியலில் ‘பெட்டி’ என்றாலே அதற்கு அர்த்தமே வேறு. கூட்டணிக்கு முன்பாகப் பெட்டி கைமாறுகிறதா, அல்லது கூட்டணிக்குப் பின்னால் கைமாறுகிறதா என்பதே பலருக்கும் தெரியாது. ஆனால், எங்களிடம் அந்த ‘பெட்டி’ கலாச்சாரம் கிடையாது. நாங்கள் தேர்தல் அறிக்கைக்கு முன்பாக வெறும் பெட்டியைக் கொடுத்து, மக்களின் நம்பிக்கையை நிரப்பிக் கோரிக்கை பெட்டியாகத் திரும்பப் பெற்றிருக்கிறோம்.
நாங்கள் சற்றும் எதிர்பாராத அளவுக்கு, பொதுமக்கள் பெருமளவில் ஆர்வத்துடன் தங்கள் கோரிக்கைகளை இந்தப் பெட்டிகளில் சமர்ப்பித்துள்ளனர். பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது மக்கள் எந்த அளவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. மக்களின் இந்தச் சிறப்பான பங்களிப்பால், எங்களது தேர்தல் அறிக்கை மிகமிகப் புரட்சிகரமானதாகவும், தெளிவான தொலைநோக்குப் பார்வை கொண்டதாகவும் அமையப் போகிறது.
இந்தக் கோரிக்கைப் பெட்டிகள் விரைவில் வாக்குப் பெட்டிகளாக மாறி, தமிழக மக்கள் எங்களுக்கு மாபெரும் வாய்ப்பினைத் தருவார்கள் என்பது உறுதி. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு வெளியே வந்த முதல்வர் ஸ்டாலின் “எல்லாம் முடிந்துவிட்டது” என ஒரு செய்கையைக் காட்டிவிட்டுச் சென்றார். உண்மையில் அவரது அந்தச் செய்கையைப் பார்க்கும்போது, “திமுக ஆட்சியே முடிந்துவிட்டது” என்பதைக் குறிப்பது போலத்தான் எனக்குத் தோன்றியது.
எங்களை ‘அடிமைக் கூட்டணி’ என்று விமர்சித்தவர்களைப் பார்த்து இன்று நான் பகிரங்கமாகக் கேட்கிறேன். திமுக காங்கிரஸுக்கு அடிமையா? அல்லது காங்கிரஸ் திமுகவுக்கு அடிமையா? திமுக இதுவரை என்னென்ன பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றியதோ, அதனை நடிகர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மிகத் தெளிவாக எடுத்து கூறியுள்ளார். அந்த வகையில் அவரை நான் பாராட்டுகிறேன். விஜய்யின் இந்தத் திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டையும், கருத்துகளையும் நான் வலிமையாக ஆதரிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.