திரைத்துறையில் இருந்து வந்த உடனேயே சிஎம் சீட் வேணும்னா எப்படி என தவெக தலைவர் விஜய்க்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கமலாலயத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘நானும், அண்ணாமலை போன்றவர்களும் உயர் பதவிகளை வகித்துவிட்டு தற்போது அந்த பதவியை புறம் தள்ளி மக்கள் பணிக்காக வந்துள்ளோம். ஆனால் விஜய்க்கு, அந்த அரசியல் அனுபவம் கிடையாது. எந்தவொரு அனுபவமும் இல்லாமல் நேரடியாக அரசியலில் குதிப்பது வெற்றியை தந்துவிடாது. தற்போதைய சூழலில் விஜய் ஒரு பூஜ்யமே. பூஜ்யம் எப்போதும் தனியாக இருந்தால் அதற்கு மதிப்புக்கிடையாது. அதற்கு முன்னால் ஒரு நம்பர் சேர்ந்தால் தான் அதற்கு மதிப்பு கிடைக்கும்.
எம்ஜிஆர் சினிமாவிலும் அரசியலிலும் ஒரே நேரத்தில் பயணித்ததால் அவரால் இரண்டிலும் வெற்றி பெற முடிந்தது. ஆனால், திரைத்துறையில் இருந்து வந்த உடனேயே சிஎம் சீட் வேணும்னா எப்படி? விஜய்க்கு அந்தளவுக்கு அனுபவம் பத்தாது. 2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைத்தால் விஜய் நிம்மதியாக தனது அரசியல் பயணத்தைத் தொடரலாம்.
ஒருவேளை, திமுக ஆட்சிக்கு வந்தால் கரூர் சம்பவத்தை அவர் நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் என்பது தனிநபர் முயற்சி அல்ல. வெற்றி பெறக்கூடிய கூட்டணியுடன் இணைந்து பயணிப்பதே புத்திசாலித்தனம். அரசியலில் அனுபவம் இல்லாததால் தான் விஜய்யுடன் யாரும் கூட்டணிக்கு செல்லவில்லை. அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.