தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேமுதிக, தவெக கட்சிகள் வர வேண்டும் என பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தராஜன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
சென்னையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு தினத்தையொட்டி பாஜக தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர்அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசினர்.
பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘2014ல் தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்த போது எந்த மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் தற்போது இருக்கிறேன், அதாவது தமிழகம் காக்கப்பட வேண்டும். விஜயகாந்த் நினைவிடத்தை பார்த்தால் எங்கும் தமிழ் என்று இருக்கும். விஜயகாந்த் தமிழகத்தில் ஊழலற்ற, தூய்மையான, நேர்மையான, வளர்ச்சிக்கான ஆட்சி அமைய வேண்டும் என நினைத்தார். அந்த ஆட்சியை தே.ஜ கூட்டணி கொடுக்க முடியும் என நினைக்கிறேன். அதனால் 2014ம் ஆண்டு போல மீண்டும் கூட்டணி அமைய வேண்டும்.
தேமுதிக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும். அதிமுக தலைமையில் கூட்டணி என்பதால் பியூஷ் கோயல் முதல்முறை வந்த போது அதிமுக தலைவர்களை சந்தித்துள்ளார். அடுத்த கட்ட பயணங்களின் போது மற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திப்பார். தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, ‘‘விஜயகாந்தின் கொள்கைகளை பிரேமலதா முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறார். விஜயகாந்த் தூய்மையான அரசியல் வரவேண்டும் என்று நினைத்தார். அவரது நினைவு நாளில் அது நினைவாக்கப்பட வேண்டும் என்பது எங்களின் கனவு. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்தால் தான் விஜய்க்கு பாதுகாப்பு என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். எதிரணியின் ஓட்டுகள் கூட்டாக இருக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஜனநாயக முறைப்படி முடிவெடுக்க வேண்டியது ஜனநாயகனின் கடமை’’ என்றார்.