பாஜக-வின் தேர்தல் அறிக்கை கதாநாயகனோ, கதாநாயகியோ அல்ல. தாய் போன்றது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
சென்னை அமைந்தகரையில் நேற்று நடைபெற்ற பாஜக தேர்தல் அறிக்கை குழுவின் கருத்துக் கேட்கும் கூட்ட தொடக்க நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: மற்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையைக் ‘கதாநாயகன்’ என்றும் ‘கதாநாயகி’ என்றும் வர்ணிக்கலாம். ஆனால், பாஜக-வின் தேர்தல் அறிக்கை ஒரு ‘தாய்’. இது மக்களின் உணர்வுகளால் ஆனது.
இதற்காகத்தான் 38 மாவட்டங்களுக்கும் 38 வாகனங்களை அனுப்பி, மக்களின் நேரடிப் பங்களிப்போடு இந்த அறிக்கையைத் தயாரிக்கிறோம். ‘விடியல்’ என்று சொல்லிக்கொள்ளும் இந்த ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டி, தமிழகத்துக்குப் புதிய விடியலை உருவாக்குவதே எங்கள் நோக்கம். எங்களின் தேர்தல் அறிக்கை வெறும் வாக்குறுதி அல்ல. இது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நீண்டகால வளர்ச்சியைத் தரும் அறிக்கையாக இருக்கும். பழைய அரசியல் சக்திகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, புதியவர்களுக்குச் சவால் விடும் வகையில் தமிழக அரசியலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை “அரசு ஊழியர்களின் போராட்டத்தைப் ‘ஃபேஷன்’ என்று அமைச்சர் விமர்சிக்கிறார். உண்மையில், தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தாமல் ஒரு ‘ஃபேஷன் ஷோ’ நடத்திக் கொண்டிருப்பது திமுக அரசுதான். திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று சி-வோட்டர் கணிப்புகள் சொல்வது பழைய தகவல். அது பாஜக கூட்டணி இறுதி செய்யப்படுவதற்கு முன்பும், பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதற்கு முன்பும் எடுக்கப்பட்டது” என்றார்.