பக்தர்களுடன் செல்ஃபி எடுத்த தமிழிசை சவுந்தரராஜன்.
சென்னை: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பாகவே, மயிலாப்பூரில் களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். கபாலீஸ்வரர் பங்குனித் தேரோட்ட விழாவில் நேற்று அவர் உற்சாகத்துடன் கலந்துகொண்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
சென்னையின் முக்கிய அடையாளமான மயிலாப்பூர் தொகுதி அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர் தொகுதி பாஜகவுக்கு என உறுதியான அன்றே, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் பிரச்சார வாகனத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வலம் வந்தார்.
பாஜக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்பே பிரச்சாரத்துக்கு வந்தது குறித்து கேட்டதற்கு, தொகுதி பொறுப்பாளர் என்ற முறையில் பங்கேற்றதாக தெரிவித்தார். ஆனாலும், தொடர்ந்து மயிலாப்பூரில் பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்ட உற்சவம் நேற்று நடைபெற்றது. அப்போது, மக்கள் கூட்டத்துக்கு இடையே கட்சித் தொண்டர் ஒருவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து தமிழிசை அங்கு வந்ததை மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
பின்னர், மாட வீதிகளில் வலம் வந்த தமிழிசை, பக்தர்களுடன் கலந்துரையாடினார். இளைஞர்கள், பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். தேரோட்டத் திருவிழாவைத் தொடர்ந்து, கட்சியின் மத்திய மண்டல நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் தமிழிசை பங்கேற்றார்.
இதெல்லாம் பார்க்கும்போது, மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜன் அறிவிக்கப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மயிலாப்பூரில் அவர் ஏற்கெனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர் என்கின்றனர் கட்சித் தொண்டர்கள்.