தமிழிசை கண்டனம்

 
தமிழகம்

“தவெகவை ஆதரிக்க திருமாவளவன் தயங்குவது பேரம் பேசுவதாலா?” - தமிழிசை

தமிழினி

சென்னை: கம்யூனிஸ்டுகளுடன் ஒட்டுமொத்தமாக முடிவை தெரிவிப்பதாக கூறிவிட்டு திருமாவளவன் தற்போது ஏன் தயங்குகிறார்? என்ன பேரம் பேசிக் கொண்டிருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “தொடர்ந்து மூன்று முறை முழுமையான எண்ணிக்கை இல்லாத காரணத்தினால், விஜய் ஆளுநரை சந்தித்த பிறகும் ஆளுநர் அவரை திருப்பி அனுப்பியிருக்கிறார். நீங்கள் ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கையோடு வாருங்கள், நாங்கள் அனுமதி தருகிறோம் என ஆளுநர் மாளிகை தெளிவாகச் சொல்கிறது. எண்ணிக்கை இல்லாமல் சென்றுவிட்டு, ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.

இத்தனை மதிப்பெண்கள் வாங்கினால் தான் தேர்வாக முடியும் என்ற தேர்வு இருக்கும்போது, அந்த எண்ணிக்கை இல்லாமலேயே என்னை தேர்வு செய்யுங்கள் எனச் சொல்வது தவறு; அது மக்களின் நம்பிக்கையை பெற்றதாக ஆகாது.

தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் சொல்லிவிட்டு, அதற்கு பின்னால் இருந்து பல முட்டுக்கட்டைகளை போடுகிறார். ஆக, வெளித்தோற்றத்தில் விஜய்யை ஆதரிப்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, எல்லாரும் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

கம்யூனிஸ்டுகள் ஆதரவை தெரிவித்துவிட்டு, மத்தியில் இருந்து பாஜக ஆளுநருக்கு அழுத்தம் தருகிறது என சொல்கிறார்கள்; அதிலும் உண்மை இல்லை. திருமாவளவனின் ஆதரவுக்காக காத்திருக்கிறோம் என சொல்கிறார்கள். கம்யூனிஸ்டுகளுடன் ஒட்டுமொத்தமாக முடிவை தெரிவிப்பதாக கூறிவிட்டு திருமாவளவன் தற்போது ஏன் தயங்குகிறார்? என்ன பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் ஒட்டுமொத்தமாக திமுகவிடமிருந்து தனது நட்பை முறித்துக் கொண்டது. இவர்களெல்லாம் அரசியல் சுயலாபத்துக்காக முடிவுகளை எடுத்துவிட்டு ஆளுநர் மீதும், பாஜக மீதும் பழி சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இதனிடையே, தனது மற்றொரு எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைய வேண்டும் என்பதில் அத்தனை பேருக்கும் அக்கறை இருக்கிறது. அந்த ஆட்சி நிலையானதாகவும் இருக்க வேண்டும் என்பதிலும் அக்கறை இருக்கிறது. அதற்கான அடிப்படை நடவடிக்கைகள் தமிழக அரசியலில் நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது அதனால் தான் பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மை. ஆனால் ஆக்கபூர்வமாகவும் உண்மை பூர்வமாகவும் எதிர்கொள்ள வேண்டிய இன்றைய அரசியல் சூழலை...உணர்ச்சிபூர்வமாக மாற்றி பல தொண்டர்கள் நடந்து கொள்வது கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி வாசலில் சகோதரர் ஒருவர் பிளேடால் வெட்டிக் கொள்வதும் வள்ளியூரில் ஒருவர் தீக்குளிக்க முயன்று அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் கவலையளிக்கக் கூடியதாக இருக்கிறது.

உடனடியாக தனது ஆதரவாளர்களுக்கு விஜய் ஒரு செய்தியை வெளியிட வேண்டும் தங்களுக்கு வாக்களித்த மக்களும் ஆதரவாளர்களும் அமைதி காக்க வேண்டும் என்றும் எந்த ஒரு ஆபத்தான முடிவுக்கு வரக்கூடாது என்பதையும் அன்பான வேண்டுகோளாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT