வேல்முருகன் | கோப்புப்படம் 
தமிழகம்

மதுரை பரமசிவம் மரணத்துக்கு காரணமான காவலர்களை பணிநீக்கம் செய்க: தவாக

மு.வேல்சங்கர்

சென்னை: “மதுரையில் எளித மனிதர் பரமசிவத்தை அடித்து சித்திரவதை செய்து படுகொலைக்குக் காரணமான, சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்களையும் உடனடியாக பணி நீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த எளிய மனிதர் அய்யா பரமசிவம், சிந்தாமணி காவல் நிலைய அதிகாரிகளாலும் காவலர்களாலும் கொடூரமாக தாக்கப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று வரும் தகவல்கள், அதிர்ச்சியும், மிகுந்த துயரத்தையும் ஏற்படுத்துகின்றன.

வாகனம் நிறுத்துவது தொடர்பான சிறு பிரச்சினையில், தன் மனைவி அய்யம்மாளுடன் நியாயம் கேட்டு காவல் நிலையத்தை நாடிய பரமசிவத்தை பாதுகாப்பதற்கு பதிலாக, காவல் நிலையத்துக்குள்ளேயே வைத்து மிருகத் தனமாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலால் தலையில் பலத்த ரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், மருத்துவமனைக்கே சென்று மிரட்டி கட்டாய வெளியேற்றம் செய்ய மிரட்டப்பட்டதோடு, வெளியே கூறினால் கஞ்சா வழக்கு போட்டு குடும்பத்தையே சிறையில் அடைப்போம் என மிரட்டியுள்ளனர்.

தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு சிந்தாமணி காவல்துறையினரே காரணம் என்று உயிருக்குப் போராடிய நிலையிலும் பரமசிவம் பதிவு செய்த மரண வாக்குமூலம், ஒட்டுமொத்த தமிழகத்தின் மனசாட்சியையும் உலுக்குகிறது. காவல்துறையினரின் இத்தகைய சட்டவிரோத வன்முறையை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, மாஜிஸ்திரேட் விசாரணைக்கும், சிந்தாமணி காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவும் ஆணையிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது என்றாலும், வழக்கை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை தரப்பில் ஆதாரங்களை அழிக்கும் வேலைகள் முடுக்கிவிடப்படலாம் என்ற அச்சம் எழுகிறது. காவல் நிலைய மரணங்கள் தொடர்கதையாக மாறுவது மக்களாட்சித் தத்துவத்துக்கே விடப்பட்ட பெரும் அச்சுறுத்தலாகும்.

எளிய உழைக்கும் மக்கள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது அதிகாரத் திமிரோடு நடத்தப்படும் இத்தகைய மனித உரிமை மீறல்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

பரமசிவத்தை அடித்து சித்திரவதை செய்து படுகொலைக்குக் காரணமான, சம்பந்தப்பட்ட அனைத்து காவலர்களையும் உடனடியாக பணி நீக்கம் செய்து, கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பரமசிவத்தின் குடும்பத்துக்கு தமிழக அரசு உடனடியாக ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT