தமிழகம்

வேலை நிறுத்தம், உண்ணாவிரதத்தை முன்னெடுப்போம்: தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் - சிஐடியு அறிவிப்பு

இ.மணிகண்டன்

விருதுநகர்: தமிழகத்தில் இயங்கி வரும் 6 கூட்டுறவு நூற்பாலைகளில் தொழிலாளர் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, சட்டப்படியான விடுப்புகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் – சிஐடியு சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 6 கூட்டுறவு நூற்பாலைகளின் சிஐடியு சங்க நிர்வாகிகள் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழு கன்வீனர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் – சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அசோகன், மாநில செயலாளர் வடிவேல்குமார் மற்றும் 6 கூட்டுறவு நூற்பாலைகளின் சிஐடியு சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளில் நிலவும் தொழிலாளர் பிரச்சினைகள், ஆலைகளின் செயல்பாடு, தொழிலாளர் பற்றாக்குறை, பணி நிரந்தரம், ஊதிய ஒப்பந்தம் மற்றும் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து தமிழகத்தில் பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனத்தின் சிஐடியு மாநில பொதுச் செயலாளர் அசோகன் அளித்த பேட்டியில், 10 சதவீதத்திற்கும் குறைவாகவே நிரந்தர தொழிலாளர்கள் 6 கூட்டுறவு நூற்பாலைகளிலும் தற்போது பணிபுரியும் தொழிலாளர்களில் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. நூற்பாலை நிர்வாகங்களில் நிலையான தொழிலாளர் சட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படாத நிலை தொடர்கிறது.

20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் கூட நிரந்தரப்படுத்தப்படாமல் தினக்கூலி தொழிலாளர்களாகவே பணிபுரிந்து வருகின்றனர். இதனால் நீண்டகாலமாக பணியாற்றும் தொழிலாளர்கள் மிகுந்த மனவேதனையுடனும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையுடனும் உள்ளனர்.

தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலை உள்ளிட்ட சில ஆலைகளில், சட்டப்படி பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் துறையை அணுகியபோது, தொழிலாளர் துறை நிரந்தரப்படுத்த உத்தரவு வழங்கியுள்ளது.

எனவே, தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்கவும், தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவும், நீண்டகாலமாக பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரையும் சட்டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தொழிலாளர் நியமனத்தில் இடைத்தரகர்கள் கூடாது கூட்டுறவு நூற்பாலைகள் லாபகரமாகவும், தொடர்ச்சியாகவும் இயங்குவதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT