சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, சென்னை சத்யமூர்த்தி பவனில் 24 மணி நேரமும் இயங்கும் ‘உதவும் கை’ என்ற வெள்ள நிவாரண உதவி மையத்தை கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று (அக்.23) திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பல இடங்களில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் சார்பில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, சென்னை சத்யமூர்த்தி பவனில் 24 மணி நேரமும் இயங்கும் ‘உதவும் கை’ என்ற கருப்பொருளுடன் வெள்ள நிவாரண உதவி மையத்தை கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
“தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும், ஒவ்வொரு வார்டுக்கும் 3 பேரைக் கொண்ட வெள்ள நிவாரண உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடியாக மக்களுக்கு உதவுவார்கள். நிவாரணப் பணிகளுக்கு தேவையான குடிநீர், உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாராக இருக்கும் வகையில் இந்நிவாரண மையம் செயல்படும். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக 2 படகுகள் உட்பட பல்வேறு விதமான நிவாரண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக்குழுவின் தலைவராக சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ்குமார் செயல்டுவார். நிவாரணப் பணிகளை களத்லிருந்து முழுவீச்சில் செயல்படுத்த இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் செயல்படுவார். உறுப்பினர்களாக கராத்தே செல்வம், கே.வி.திலகர், கோபி, ஜோதி பொன்னம்பலம், சுபாஷினி, பானுபிரியா, சுகன்யா, அமிர்தவர்ஷினி உள்ளிட்டோர் செயல்படுவார்கள். காங்கிரஸ் உதவி மையத்தை தொடர்புகொள்ள 7871004668 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவும் உள்ளங்கள் இந்த மையத்துக்கு பொருளுதவியும் செய்யலாம். வெள்ள நிவாரண பணிகளில் அரசு செய்வது போல நாங்களும் செய்கிறோம்.
அண்ணாமலை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முகமூடி. தமிழகத்தில் அண்ணாமலை தீய செடி போல வளர்ந்து வருகிறார். தமிழக மக்கள் போலிகளை கண்டு ஏமாறக்கூடாது. கடந்த திமுக ஆட்சியில் எங்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை. அந்த அவமானங்களை சொல்லி தான் ஆட்சியில் பங்கு கேட்டோம். அதை தராமல், தமிழகம் ஏற்றுக்கொள்ளாது என்று சொன்னார்கள். ஆனால், இப்போது தமிழகம் ஏற்றுக்கொண்டது” என்று அவர் கூறினார்.
உடன் அமைச்சர் செ.ராஜேஷ் குமார், மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், பொருளாளர் ரூபி மனோகரன், பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, பி.வி.தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விலைவாசி உயர்வும், டாலர் மதிப்பும்:
தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் கடந்த ஓராண்டில் இறைச்சி வகைகள் 10 முதல் 20 சதவீதம் வரையும், மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி விலை 25 சதவீதம் வரையும் உயர்ந்துள்ளது.
சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் உணவின் விலை கடந்த ஆண்டை விட தற்போது 40 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
வாகன எரிபொருளில் எத்தனாலை கலக்கும் திட்டத்தை செயல்படுத்திய காரணத்தினால் சர்க்கரை விலை ரூ.40-லிருந்து ரூ.70 வரை உயர்ந்துவிட்டது. முக்கால்வாசி விலைவாசி உயர்வுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்வுதான் காரணம்.
இந்தியாவில் உள்ள டாப் ஐடி நிறுவனங்கள் 5-ல் 25 ஆயிரம் பேரும், தனியார் வங்கிகளில் 5 ஆயிரம் பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு யார் காரணம் என்று அனைவருக்கும் தெரியும்” என்று அவர் கூறினார்.