விருதுநகர்: “சிறைகளில் மரணம் என்பது தமிழகத்துக்கு மிகப் பெரிய களங்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவலர்களுக்கும் களங்கம் ஏற்படுகிறது. காவல் துறை சீரமைக்கப்பட வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
விருதுநகரில் கடந்த கல்வி ஆண்டில் 10-ம் மற்றும் பிளஸ்-1 தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காமராஜர் விருது வழங்கும் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகரில் இன்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்துகொண்டு 250 பள்ளிகளைச் சேர்ந்த 1,200 மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினார்.
அப்பேது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “13 ஆண்டுகளாக காமராஜர் பெயரில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. அருப்புக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அரசு, தனியார், அரசு உதவிபெறும் 250 பள்ளிகளில் 10 மற்றும் 11ம் வகுப்புகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் 1,200 பேருக்கு விருதுநகர் வழங்கப்பட்டு வருகின்றன. மதுரையில் 880 மாணவர்களுக்கு (இன்று) விருதுநகள் வழங்குகிறோம். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இருந்த விருதுகளை வழங்குகிறேன்.
கூடங்குளத்தில் தகவல்கள் வெளியான சம்பவம் மிகவும் கண்டனத்திற்கு உரியது. இந்த மத்திய அரசு தேதிய பாதுகாப்பில் எவ்வளவு மெத்தனமாக உள்ளது என்பது தெரிகிறது.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன். தேசிய பாதுகாப்பு ஆலோசகம் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகம் ஒன்றாக இருக்க வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக இருக்க வேண்டும். இது நம் ஜீவாதார பிரச்சினை. அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது. முதல்வர் இதுதொடர்பாக குழு அமைக்கலாம். மத்திய நீர் வளத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். அரசியல் பார்க்காமல் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றாக இருக்க வேண்டும்.
இஸ்ரோவில் பல விஞ்ஞானிகள் வெளியேறுவது தடுக்கப்பட வேண்டும். அது அதிர்ச்சிக்குரியது. பிரதமர் பதில் அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக குரல் எழுப்புவோம்.
நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போராட்டம் நடத்தக் கூடாது என்பதும் ஜனநாயகத்துக்கு எதிரானது. நாங்கள் கேள்வி கேட்க நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும். நீட் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு விவாதம் கிடையாதா? இதைப் பற்றி நாங்கள் பேசுவோம். அரசே இதை எதிர்ப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அதை மீறி நாங்கள் போராட்டம் நடத்துவோம்.
சிறைகளில் மரணம் என்பது தமிழகத்துக்கு மிகப் பெரிய களங்கத்தை ஏற்படுத்துகிறது. இச்சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவலர்களுக்கும் களங்கம் ஏற்படுகிறது. காவல் துறை சீரமைக்கப்பட வேண்டும். இது நமது கடமை” என்று கூறினார்.