உடையார்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைக்கான லாரியை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர்.

 
தமிழகம்

“தவெக தலைவர் விஜய்க்கு தமிழக மக்கள் வரும் தேர்தலில் உரிய பதிலளிப்பர்” - அமைச்சர் சிவசங்கர்

பெ.பாரதி

அரியலூர்: “திமுக குறித்து புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசியதற்கு வரும் தேர்தலில் உரிய பதிலளிப்பர்” என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேம்பாட்டுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் லாரி இயக்கி வைத்தல், உடையார்பாளையம், உஞ்சினி, செந்துறை, நக்கம்பாடி, குழுமூர், சன்னாசிநல்லூர் மற்றும் தளவாய் ஆகிய கிராமங்களில் சாலைகள் மேம்படுத்துதல், பாலம் கட்டுதல் என ரூ.25.63 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்ட பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று அந்தந்த பகுதிகளில் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியது: “நெடுஞ்சாலைத் துறை மூலம் செந்துறை ஒன்றியத்தில் பல்வேறு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தளவாய் பகுதியில் கடந்த வெள்ளத்தின்போது வெள்ள நீர் வடியாமல் இரண்டு கிராமங்கள் மூழ்குகின்ற நிலையில் இருந்த இடத்தில், சாலையை வெட்டி, அந்த நீரை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த இடத்தில் இன்றைக்கு புதிய ஒரு பாலம் அமைக்கப்படுகிறது.

அதிமுக பொதுக் குழுவில், திமுக கூட எங்க ஆட்சியைப் பற்றி குறை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு சிறப்பான ஆட்சி நடத்தியிருக்கோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அப்படியானால் மக்கள் அவர்களுக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கியிருப்பார்கள். மக்களே தூக்கி எறிந்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தார்.

மொத்த இந்தியாவையே குலுங்கச் செய்தது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு. அது நடந்ததை டிவியில் பார்த்தேன் என்று சொன்ன ஒரு முதலமைச்சராக இருந்தவர். மக்களுடைய பிரச்சினை எதுவும் அவருடைய கவனத்துக்கு செல்லவில்லை. அவருடைய ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக இருந்த காரணத்தினால் தான், அவர்களை அகற்றிவிட்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை மக்கள் அமைத்தார்கள்.

தற்போது நடைபெறுகின்ற தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடைபெறுகிறது என்பதை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து ஆதாரபூர்வமாக எடுத்து வைத்து வருகிறார். ஆனால் அமித் ஷா அதற்கு சொல்லி இருக்கிற பதில் என்பது மிக மிக அபத்தமானது.

இன்றைக்கு அமித் ஷா சொல்வதை, ஏற்கெனவே அவருடைய கட்சித் தலைவர்கள் சொல்லியிருக்கலாம். அதற்கு முன்பாக பல்வேறு எதிர்க்கட்சிகள் இருந்தது, யாராவது சொல்லியிருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் பாஜகவிலேயே பிரதமராக வாஜ்பாய் இருந்தார், அவர் சொல்லியிருக்கலாம்.

யாரும் சொல்லாததை இவர்கள் பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறார்கள், எப்போதும் சொல்லாததை இப்போது வந்து சொல்கிறார்கள் என்றால், தங்களுடைய திருட்டை மறைப்பதற்காக திசை திருப்புகிற வேலையை, அமித் ஷா செய்கிறார் என்பது தெரிகிறது.

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய், திமுகவை நம்பாதீர்கள் என பேசியதற்கு தமிழக மக்கள் அதற்கு வரும் தேர்தலிலே உரிய பதிலளிப்பர். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சமீப காலமாக தமிழ்நாடு சம்பந்தமா கருத்து சொல்வது, சர்ச்சையை ஏற்படுத்துவது எல்லாம் பாஜவுக்காக செய்து வருகிறார்.

பாஜக யாரையாவது ஒருவரைப் பிடித்து வந்து ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் செய்வது வழக்கம். ஏற்கெனவே போலீஸாக இருந்த அண்ணாமலையை கொண்டு வந்து அரசியல் செய்தார்கள். அதுபோல ஆந்திர துணை முதல்வர் இங்கே மாறி வரப்போகிறாரோ என தெரியவில்லை.

பவன் கல்யாணுக்கு தமிழ்நாட்டினுடைய கள நிலவரம் புரியாது. அவர் ஆந்திராவில் இருப்பதாக நினைத்து பேசுகிறார். இன்னும் சொல்லப்போனால் ஆந்திராவிலேயும் பாஜகவுக்கான தளம் கிடையாது. அவர்கள் அங்கே இப்போதுதான் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே, பவன் கல்யாண் மூலமாக இங்கே ஏதாவது செய்யலாமா என்று பா.ஜ.க. நினைத்தால், அது நடக்காது. தமிழ்நாட்டு மண் அதற்கு இடம் கொடுக்காது.

அதிமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும் என கடந்த மக்களவைத் தேர்தலிலிருந்து எடப்பாடி பழனிசாமி சொல்லிக்கொண்டே இருக்கிறார். பார்க்கத்தான் போகிறோம். சட்டப்பேரவைத் தேர்தல் வரப்போகிறது. திராவிட முன்னேற்றக் கழகம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கத்தான் போகிறது” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT