தமிழகம்

தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்க தொடங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

வெற்றி மயிலோன்

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை இன்று (ஜூன் 18) காலை சரியாக 10 மணிக்குக் கூடியது. ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் முதல் முறை​யாக உரையாற்றி வரும் கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட தொடங்கியது. தொடர்ந்து தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. இதில் ஏதும் சர்ச்சை உருவாகுமோ என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், கூட்டத்தொடர் சலசலப்புகள் இன்றி சுமுகமாகத் தொடங்கியது.

முன்னதாக தமிழக சட்டப்பேரவைக்கு வருகை தந்த ஆளுநரை தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், சட்டப்பேரவைச் செயலர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிந்​து, தவெக 108 இடங்​களில் வெற்றி பெற்​றது. இதையடுத்​து, திமுக கூட்​ட​ணி​யில் இருந்த காங்கிரஸ், விசிக, இந்​திய கம்யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட், ஐயூஎம்​எல் கட்​சிகளின் ஆதர​வுடன், முதல்​வ​ராக தவெக தலை​வர் விஜய் கடந்த மே 10-ம் தேதி பொறுப்​பேற்​றார்.

இதையடுத்​து, 17-வது சட்​டப்​பேரவை அமைக்​கப்​பட்​டது. தற்காலிகப் பேர​வைத் தலை​வர் கருப்​பையா முன்​னிலை​யில் சட்டப்​பேரவை உறுப்​பினர்​கள் உறு​தி​மொழி ஏற்​றனர். அதன்​பின், பேர​வைத் தலை​வ​ராக ஜே.சி.டி.பிர​பாகர் மற்​றும் துணைத் தலைவ​ராக ரவிசங்​கர் ஆகியோர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

மே.13-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய் தலைமையிலான அரசு பெரும்​பான்​மையை நிரூபித்​தது. முதல்வர் விஜய் தலைமையி​லான அமைச்​சர​வை​யில் காங்​கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களுக்​கும் இடம் அளிக்​கப்​பட்​டது.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் ஆண்டு முதல் கூட்​டம் ஆளுநர் உரையுடன் தொடங்​கு​வது வழக்​கம். இந்​நிலை​யில், தமிழகத்​தின் 17–வது சட்​டப்​பேர​வைக் கூட்​டம் ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் தலைமை​யில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்​கியது. இந்த கூட்டத்தொடரில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது, இரண்டாவதாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்து வருகிறார்.

முன்னதாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாக்களின் போது, ஆளுநர் மாளிகையில் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டது சர்ச்சையை உருவாக்கியது. இந்தச் சூழலில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணா, பெரியார், காமராஜர், அம்பேத்கரை சுட்டிக்காட்டி...

தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் தனது உரையை வாசித்து வருகிறார். அவர் தனது உரையில் அண்ணா, பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டுப் பேசினார். மேலும், பெயர்கள் உச்சரிப்பில் பிழைகள் இருந்தால் பொறுத்தருளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த ஜனவரி மாதம் அப்​போதைய ஆளுநர் ஆர்​.என்​.ரவி தலைமை​யில் சட்​டப்​பேர​வைக் கூட்​டம் தொடங்​கியது. ஆளுநர் ரவி, வந்தே மாதரம் பாடல் இசைக்​கப்​ப​டாததை சுட்​டிக்​காட்​டி, அரசு தயாரித்து அளித்த உரையைப் பேர​வை​யில் வாசிக்​காமல் வெளி​யேறி​னார்.

அதன்​பின், அரசு தயாரித்து அளித்த உரை மட்​டுமே பேர​வைக் குறிப்​பில் இடம்​பெற வேண்​டும் என்​ப​தற்​கான தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அப்​போதைய பேர​வைத் தலை​வர் மு.அப்பாவு தமிழ் உரையை வாசித்​தார் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT