சென்னை: தமிழ்நாடு அரசின் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பூதியம், தினக் கூலி போன்ற முறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு நீண்ட காலமாக பணியாற்றி வருகிறார்கள்.
அந்த மாற்றுத் திறனாளி பணியாளர்களுக்கு எந்த விதமான சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்படுவதில்லை. நிரந்தர பணியாளர்களுக்கு இணையான ஊதியமும் வழங்கப்படுவதில்லை.
தமிழ்நாடு அரசின் அரசாணை எண் 151-ன் அடிப்படையில் அரசு பணியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடிய அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் எந்தவித நிபந்தனையும் இன்றி பணி நிரந்தரப்படுத்திட வேண்டும்.
அந்த அரசாணையின் அடிப்படையில் பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு அனைத்து துறை மாற்றுத் திறனாளி பணியாளர்கள் கூட்டமைப்பினர், தங்கள் குடும்பத்தினருடன் தொடர் அறவழி காத்திருப்புப் போராட்டத்தை சென்னையில் இன்று முதல் (29.12.2025) தமிழ்நாடு அரசு மாற்று திறனாளி ஆணையரகத்தில் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு அவர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.