தமிழகம்

பயிர்க் கடன் தள்ளுபடிக்காக ரூ.2,758 கோடியை விடுவித்தது தமிழக அரசு

வெற்றி மயிலோன்

சென்னை: விவசாயிகள் அனைவரும் முழுமையாகப் பயனடையும் வகையில் கூட்டுறவுப் பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரூ.3,038.83 கோடி கூடுதல் நிதியில் ரூ.2,758 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பயிர்க் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்தும், தள்ளுபடிக்குத் தகுதியான பயிர்க்கடன்களுக்கான காலவரையறையை 01.05.2025 முதல் 31.03.2026 வரையாக நீடித்தும் முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு ஏற்கெனவே முதற்கட்டமாக 25.05.2026 அன்று ரூ.2,044 கோடியும், இரண்டாவது கட்டமாக 16.06.2026 அன்று ரூ.5,267 கோடியும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விவசாயிகளிடமிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று, மூன்றாவது கட்டமாக 17.08.2026 அன்று சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சிறு, குறு மற்றும் இதர பெரு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களில் ரூ.75,000 வரையிலான கடன்களுக்கு முழுத் தள்ளுபடியும், ரூ.75,001 முதல் ரூ.1,00,000 வரையிலான கடன்களுக்கு ரூ.75,000 தள்ளுபடித் தொகையும், ரூ.1,00,000-க்கு மேற்பட்ட கடன்களுக்கு ரூ.35,000 தள்ளுபடித் தொகையும் வழங்கப்பட்டு ரூ.6,024 கோடி அரசால் விடுவிக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை மறுபரிசீலனை செய்ய கடந்த 22.10.2026 அன்று தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இக்கட்டான நிதிநிலையிலும் விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணைகளைப் பிறப்பித்துள்ளார்கள்.

அதன்படி, தள்ளுபடித் காலவரையறை 01.05.2025 முதல் 31.03.2026 வரையாக நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ.75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், 19.06.2026-க்கு முன்னர் கடன் தொகையை முழுமையாகச் செலுத்தியவர்களுக்கும், பகுதித் தள்ளுபடி பெற்று தவணை தவறிய கடன்களுக்குரிய வட்டியினை முழுமையாகத் தள்ளுபடி செய்தும், ரூ.10,000-க்கும் குறைவாக மாத ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் தகுதியான கடன்களையும் தள்ளுபடி செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தினர் அல்லது ஒரே விவசாயி பல கடன்கள் பெற்றிருப்பின், அதிகபட்ச தள்ளுபடிக்குத் தகுதி பெறும் ஒரு கடனுக்கான தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலமாகக் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற சுமார் 13,24,882 விவசாயிகள் அதிகபட்சமாக ரூ.75,000 வரையிலான பணப்பயனைப் பெறுவார்கள்; இதில் 41,342 விவசாயிகள் புதிதாகப் பயனடைகின்றனர். இந்தக் கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்குச் சுமார் ரூ.3,038.83 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் நிலையில், இதுவரை வழங்கப்பட்ட ரூ.6,024 கோடி தள்ளுபடியுடன் சேர்த்து மொத்தம் ரூ.9,062.83 கோடி அளவிற்குப் பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதில் தற்போதைய அறிவிப்புக்காக மட்டும் 18.11.2026 வரை ரூ.2,758 கோடி அரசால் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 06.11.2026-க்கு முன்னர் கடனை முழுமையாகத் திரும்பச் செலுத்திய விவசாயிகளுக்கும் தகுதியான தள்ளுபடித் தொகை திரும்ப அளிக்கப்படுவதுடன், பகுதித் தள்ளுபடி பெற்று 30.11.2026-க்குள் தவணைத் தொகையை நேர் செய்யும் விவசாயிகளுக்கான வட்டியையும் அரசே செலுத்தும். இந்த விரிவுபடுத்தப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு எதிர்வரும் சாகுபடி பருவத்திற்குத் தேவையான உதவிகளைப் பெற்றுத் தந்து, விவசாயிகளின் பொருளாதாரச் சுமையை முற்றிலும் குறைக்கும் வகையில் அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT