மாணிக்கம் தாகூர்
சென்னை: ‘தமிழகத்தில் 7,500 மண்டல காங்கிரஸ் தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்’ என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தைச் சீரமைக்கும் திட்டத்தின் முதல்கட்டமாக, மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் முழுமையாகச் சீரமைக்கப்பட்டு புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கான சிறப்பு புத்தாக்கப் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதிலும் உள்ள வட்டார, நகர, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டிகளும், மாநகராட்சிகளில் உள்ள சர்க்கிள் மற்றும் வட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் முழுமையாக சீரமைக்கப்படவுள்ளன. மேலும், தமிழகத்திலுள்ள ஏறக்குறைய 75,000 வாக்குச்சாவடிகளைக் கணக்கில் கொண்டு, 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு தலைவர் என்ற அடிப்படையில் சுமார் 7,500 மண்டல காங்கிரஸ் தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான பணிகளை மேற்கொள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் சிறப்பு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அளவில் இந்த சீரமைப்புப் பணிகளை அந்தந்த மாவட்டத் தலைவர்களோடு இணைந்து விரைவாகச் செயல்படுத்திட, கட்சிப் பணிகளில் நீண்ட அனுபவம் பெற்ற 74 முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.