சென்னை: “டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் உயரிய லட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனித நேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்” என்று தமிழக முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
1886ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான இவர், சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் விளங்கினார். தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் மற்றும் பெண் குழந்தைகள் கடத்தல் தடுப்புச் சட்டங்கள் நிறைவேற முக்கியக் காரணமாக இவர் இருந்துள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவராகவும் விளங்கிய முத்துலட்சுமி ரெட்டி, ஆதரவற்ற பெண்களுக்காக 'அவ்வை இல்லம்' மற்றும் புகழ்பெற்ற 'அடையாறு புற்றுநோய் மருத்துவமனை' ஆகியவற்றைத் தொடங்கினார். இவரின் சமூகப் பணிகளைப் பாரட்டி 1956ம் ஆண்டு மத்திய அரசால் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
டாக்டர் முத்துலட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக 'அவ்வை இல்லம்', புற்றுநோயாளிகளின் வாழ்வொளியாக 'அடையாறு புற்றுநோய் நிலையம்' போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தைத் திருமண தடைச் சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி ஆவார்.
அவரது உயரிய லட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனிதநேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்!” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.