தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மதுராந்தகத்தில் 85.90% வாக்குகளும், தாராபுரத்தில் 80.31% வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 9-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் (தவெக), பரந்தாமன் (திமுக), கணிதா சம்பத் (அதிமுக), சுகந்தி (மார்க்சிஸ்ட்), ஜானகிராமன் (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சைகள் என 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அதேபோல், தாராபுரம் தொகுதியில் சத்யபாமா (தவெக), சுகன்யா(திமுக), பானுமதி (அதிமுக), லட்சுமணன் (சிபிஐ), கார்த்திகா (நாதக) உட்பட 22 பேர் போட்டியிட்டனர்.
தட்டாஞ்சாவடி
தட்டாஞ்சாவடியில் 80.81% வாக்குப்பதிவு
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மங்கலம், தட்டாஞ்சாவடி என இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இத்தொகுதிக்கான இடைத் தேர்தல் இன்று நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தட்டாஞ்சாவடியில் 80.81% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்த தொகுதியில் அரசியல் கட்சிகள் சார்பில் 6 பேரும், சுயேச்சைகளாக 5 பேரும் மொத்தமாக 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம், திமுக வேட்பாளர் சேதுசெல்வம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அ.மு.சலீம் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகக் கருதப்படுகின்றனர்.
மொத்தமுள்ள 31 வாக்குச்சாவடிகளில் கவுண்டம்பாளையம் முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி பூத், வினோபாநகர் பொய்யாகுளம் கம்யூனிட்டி ஹால் அரங்கு ஆகிய பூத்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டன. அதனால், இங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
மேற்கு வங்க நிலவரம்:
மேற்கு வங்கத்தில் ரெஜிநகர் சட்டப்பேரவை தொகுதியில் 79.85% வாக்குகளும் நந்திகிராம் தொகுதியில் 80.67% வாக்குகளும் பதிவாகி உள்ளன.
அசாம் மாநிலம் நாகோன் மக்களவை தொகுயில் 76.16% வாக்குகள் பதிவாகி உள்ளன.