சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் எதிர்பார்க்கப்படும் நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 3-வது வாரத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே இதற்கான அறிவிப்பு பிப்ரவரி இறுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், தற்போதைய திமுக அரசால் வரும் 2026-27-ம் நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில், இடைக்கால நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. துறை வாரியான கோரிக்கைகள், அதற்கான ஒதுக்கீடுகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகளை தனித்தனியாக தாக்கல் செய்து வருகிறது. அதே அடிப்படையில், தற்போதும் இடைக்கால நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் காலம் என்பதால் பெண்கள், இளைஞர்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், வரும் பிப்.5-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. அதில், நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் புதிய அறிவிப்புகளுக்கான ஒப்புதல் அளிக்கப்படும். அதன்பின் இறுதி செய்யப்பட்டு, பேரவையில் தாக்கல் செய்யப்படும்.
இந்நிலையில், தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்காக சட்டப்பேரவைக் கூட்டம் இம்மாதம் 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.