சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் நேற்று கொண்டுவந்த அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை நீதிமன்ற மொழியாக தமிழை மத்திய அரசு அங்கீகரிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் நேற்று முன்மொழிந்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் ஏற்கெனவே தமிழ் சட்ட ரீதியான நீதிமன்ற மொழியாக உள்ள நிலையில், நீதித்துறை அமைப்பின் மாநில உச்ச நிலையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்திலும் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். நீதியின் மொழி மக்களுக்கு புரியும் மொழியாக இருப்பது ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கம். எனவே, இந்த தீர்மானத்தை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்துவதற்கான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவை ஏற்கெனவே கடந்த 2006 டிச.6-ம் தேதி ஒருமனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது.
இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் கடந்த 2018 பிப்.2-ம் தேதி கூறும்போது, “தமிழகத்தின் முன்மொழிவு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டது. 2012 அக்.16-ம் தேதியிட்ட கடிதத்தின்படி உச்ச நீதிமன்ற முழு அமர்வு இந்த முன்மொழிவை ஏற்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சட்டத் தமிழ், மொழிபெயர்ப்பு, டிஜிட்டல் நீதிமன்றங்கள், தொழில்நுட்ப அடிப்படையிலான மொழிபெயர்ப்பு மற்றும் சட்டத்தரவு தளங்கள் ஆகியவை பெரிதும் முன்னேறி உள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலமாக, தமிழில் பேசுவதை அதே நேரத்தில் ஆங்கிலத்தில் கேட்கக்கூடிய அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறி உள்ளதால், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்வது அவசியமாகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
தீர்மான விவரம்: சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும். தமிழில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களுக்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும். உயர் நீதிமன்றத் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள், உத்தரவுகள் அனைத்தையும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்களுக்கு சட்டத் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்புக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 348(2) மற்றும் ஆட்சி மொழிச் சட்டம் 1963 பிரிவு 7-ன்கீழ் மாநில ஆளுநரால் அனுப்பப்படும் முன்மொழிவுகள்மீது தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று சட்டப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தீர்மானத்தை ஆதரித்து திமுக உறுப்பினர் எஸ்.ரகுபதி பேசியபோது, “உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாகக் கொண்டு வருவதற்கு 2006-ல் கருணாநிதியும், பின்னர் ஸ்டாலினும் முதல்வராக இருந்தபோது தீர்மானம் கொண்டு வந்தனர். தற்போது முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வரவேற்கிறோம். இது எங்கள் குழந்தை. திமுக ஆட்சியில் ஏற்கெனவே 2 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த 3-வது முயற்சியாவது வெற்றி பெறட்டும்” என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “இதற்கு முன்னதாக ஆங்கிலம் முதன்மை மொழி, அதன்பிறகு தமிழ் மொழி என்றே தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி, அதன்பிறகு ஆங்கிலம் என்று தீர்மானம் முன்மொழிந்துள்ளது இதுவே முதல்முறை. இது யாருடைய குழந்தையும் அல்ல” என்றார்.
தொடர்ந்து, அமைச்சர்கள் ஷாஜகான், வன்னி அரசு, ராஜேஷ்குமார், அதிமுகவின் தளவாய் சுந்தரம், சி.வி.சண்முகம், பாமகவின் சவுமியா அன்புமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியின் செல்லசுவாமி, பாஜகவின் போஜராஜன், தேமுதிகவின் பிரேமலதா ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.