தமிழகம்

“அசைக்க முடியாத சக்தியாக இருக்க வேண்டும்” - தமாகாவினருக்கு ஜி.கே.வாசன் அறிவுரை

ச.கார்த்திகேயன்

சென்னை: வரும் தேர்தல்களில் தமாகா அசைக்க முடியாத சக்தியாக இருக்க வேண்டும் என்று கட்சித் தொண்டர்களுக்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸின் (தமாகா) வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில், கட்சியின் 13-ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை வியாசர்பாடியில் இன்று (நவ.28) நடைபெற்றது. இதில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று பேசியது: “நேர்மை, எளிமை, தூய்மை என்ற கொள்கைகளுடன் தமாகா செயல்பட்டு வருகிறது. இது வெற்றி, தோல்வியை கண்டு அஞ்சாத கட்சி. 13-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இக்கட்சி புதுப்பொலியுடன் செயல்பட தொடங்கியுள்ளது.

தமாகா சரியான பாதையில், வெற்றிப் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இடைத்தேர்தல், அதன்பிறகு உள்ளாட்சித் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தல், 2031 சட்டப்பேரவைத் தேர்தல்கள் வர உள்ளன. வரும் ஒவ்வொரு தேர்தலிலும் தமாகா அசைக்க முடியாத சக்தியாக இருக்க வேண்டும். அதற்கு கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்.

இனி தமாகாவின் வெற்றிப் பயணத்தை தொடங்க வேண்டும். 12 ஆண்டுகளாக தனது பாதை மாறாமல் கட்சி பயணித்து வருகிறது. வரும் தேர்தல்களில் வெற்றிக்கு அடித்தளமிடும். கிராம, நகரங்கள் முழுவதும் தமாகாவின் மூவர்ணக்கொடி பட்டொளி வீசி பறக்கும். தமாகாவின் பலம் நிரூபிக்கப்படும்” என்று அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில் ஊழலை ஒழிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஊழலை ஒழிப்போம் என்று வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்து, ஊழல் அற்ற ஆட்சியை வழங்கியதால், இரு தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவளித்தோம்.

வரும் இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பிறகு எங்கள் ஆதரவு நிலைப்பாட்டை அறிவிப்போம். தவெக அரசின் 6 மாத ஆட்சியில் 100-க்கு 100 மதிப்பெண் எதிர்பார்க்க முடியாது. அதற்கு இன்னும் காலங்கள் தேவை” என்று அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர்கள் சக்தி வடிவேலு, விடியல் சேகர், மூத்த தலைவர்கள் ஈ.கே.அருண்குமார், ராஜம் எம்பி நாதன், ஆர்.எஸ்.முத்து, ராமன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி காந்தன் பாரதி, வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஈ.கே.அருண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT