புதுச்சேரி: புதுச்சேரியில் வசித்து தமிழகத்தில் விவசாயம் செய்வோருக்கு கடன் தள்ளுபடி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசோடு பேசுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விவசாயிகளிடம் உறுதி தந்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை தமிழ்நாடு- புதுச்சேரி விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் முருகையன், பொதுச்செயலர் ரவி, பொருளாளர் ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று சந்தித்தனர்.
அப்போது அவர்கள் முதல்வரிடம் மனு அளித்தனர். அதன் விவரம்: புதுச்சேரியில் வசிக்கும் விவசாயிகள் பலரும் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் விவசாய நிலம் வைத்துள்ளனர். அவர்கள் அங்கே அனைத்து பயிர்களையும் விவசாயம் செய்து வருகிறார்கள். தற்போது தமிழக அரசு விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளது.
இச்சலுகை புதுச்சேரியில் வசிக்கும் தமிழக விவசாயிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பகுதி தமிழகததுடன் பூளோக ரீதியாக பின்னி பிணைந்துள்ளது. புதுச்சேரியில வசிக்கும் தமிழக விவசாயிகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த தமிழக அரசின் சலுகை, விவசாய பயிர் கடன் தள்ளுபடியை பெற்று தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
அதைத்தொடர்ந்து நிர்வாகிகள் முதல்வரிடம், புதுச்சேரியை ஒட்டிய தமிழக பகுதிகளில் விவசாயிகள் பயிர் சாகுபடி செய்கிறோம். ஏற்கெனவே தமிழக அரசு கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்தில் விவசாயம் செய்யும் புதுச்சேரியில் வசிக்கும் விவசாயிகளும் பயன் பெறும் வகையில் நடை்முறைப்படுத்தினர்.
தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திட்டம் மறுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தவெக அரசு இது போன்ற புதிய அணுகுமுறையை கையாள்வதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசோடு பேசி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது போல விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி திட்டம் செயல்படுத்த வேண்டும்" என்றனர். இதையடுத்து விவசாயிகளிடம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, "இது சம்பந்தமாக தமிழக அரசோடு பேசுகிறேன்" என்று உறுதி தந்தார்.