தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், மண்டலம் 3, வார்டு 43-ல் விநியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில், துர்நாற்றத்துடன் வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 3, வார்டு 43-க்கு உட்பட்ட எம்.எம்.டி.ஏ.நகர், பவானிதெரு, பாபு தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களுக்கு சிட்லபாக்கம் பகுதியில் இருந்து மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களாக குடிநீரின் நிறம் மாறி வந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வருவதுடன், துர்நாற்றமும் வீசுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குடிநீரில் கழிவுநீர் கலந்தது போன்று இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், பிரச்சினையை சரி செய்வதற்கு பதிலாக குடிநீர் விநியோகத்தை நிறுத்திவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் குடிநீருக்காக அவதிப்படுவதாகவும், தற்போது டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் குறித்து மாநகராட்சியின் சுகாதார பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், குடிநீரின் தரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, தண்ணீரின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி, பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.