சென்னை: தாம்பரம் மாநகராட்சியில் சட்ட விதிகளை மீறி டெண்டர் முறைகேடு நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம், செவ்வாய்க்கிழமை அன்று புகார் அளித்தது. இந்நிலையில், அதன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தாம்பரம் மாநகராட்சியில் இரண்டு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிகழ்வில் அறப்போர் இயக்கத்தினால் குறிப்பிடப்பட்ட குறைபாடுகள் மீது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களால் முதற்கட்ட விசாரணை செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தாம்பரம் மாநகராட்சியில் மண்டலம் 4-க்கு உட்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் ரூ.18.60 லட்சம் மதிப்பீட்டில் நீர் சேமிப்பு சிலை அமைத்து மாநகரம் அழகுபடுத்தல் பணி மற்றும் தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 4-க்கு உட்பட்ட பெருங்களத்தூர் பகுதியில் ரூ.27.30 லட்சம் மதிப்பீட்டில் அசோகத் தூண் சிலை அமைத்து மாநகரம் அழகுபடுத்துதல் பணி ஆகிய பணிகளுக்கு பொதுநிதி அல்லது சிஎஸ்ஆர் மூலம் செயல்படுத்தலாம் என 14.07.2026 அன்று மாமன்றத்தில் பொருள் வைக்கப்பட்டு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 23.07.2026 அன்று மாநகராட்சி ஆணையரால் மேற்படி பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே 24.07.2026 அன்று ஒரு தனியார் நிறுவனத்தால் மேற்படி 2 பணிகளையும் செயல்படுத்தித் தருவதாக கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, அந்நிறுவனத்தால் மேற்கண்ட 2 பணிகளும் முடிக்கப்பட்ட போதிலும் 06.08.2026 அன்று ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வு செயல்முறை குறைபாடு என கண்டறியப்பட்டுள்ளது.
மேற்படி நிகழ்வில் பணியாணை ஏதும் வழங்கப்படவில்லை, மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து செலவினம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும், செயல்முறை குறைபாடுகளுக்காக தாம்பரம் மாநகராட்சியின் தொடர்புடைய மண்டல உதவி செயற்பொறியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மாநகராட்சி ஆணையர், பணியிலிருந்து அரசால் விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்நிகழ்வு தொடர்பான விரிவான விசாரணை நடத்துமாறு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறிழைத்த அனைத்து நபர்கள் மீதும் எவ்வித விடுபாடுமின்றி உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என அரசு தெரிவித்துள்ளது.
அறப்போர் இயக்கம் வரவேற்பு
“இன்று அறப்போர் இயக்கம் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் அவர்கள் மீது கொடுத்த டெண்டர் முறைகேடு புகாரின் அடிப்படையில் அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த முதற்கட்ட நடவடிக்கையை அறப்போர் இயக்கம் வரவேற்கிறது.
அரசு சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் அனைவரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கையும், கிரிமினல் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்ததாரரை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும். அறப்போர் தொடரும்” என்று அறப்போர் இயக்கம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக, தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த தவெக அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் விரிவான புகார் மனுவை ஆதாரங்களுடன் இன்று அனுப்பியதாக அறப்போர் இயக்கம் தெரிவித்திருந்தது.