இடது: மு.வீரபாண்டியன் | வலது: அருள் விக்னேஷ்

 
தமிழகம்

“கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை தேவை” - மு.வீரபாண்டியன்

வெற்றி மயிலோன்

சென்னை: “கண்ணியக் குறைவான, ஒழுக்கக்கேடான, பாலியல் வன்மச் செயலில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தவெக உறுப்பினர் அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதோடு, மதுபோதையில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு தனி பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.

தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் கண்ணியக் குறைவான, ஒழுக்கக்கேடான, பாலியல் வன்மச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT