சென்னை: “இன்றைய இண்டிகோ விமான சேவை முடக்கத்துக்கு காரணம், அவர்களின் உள்ளக நிர்வாகக் கோளாறே என்றாலும், உண்மையில் இது ஓர் எச்சரிக்கை மணி” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இண்டிகோ விமான நிறுவனத்தின் நிர்வாக சீர்கேட்டினால், ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒரு சம்பவமே, நாட்டின் முக்கிய சேவைகள் தனியாரின் கைகளில் சென்றால், என்ன கொடுமை நடக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள போதுமானது.
மத்திய பாஜக அரசு, நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்தையும் தனியார் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைத்து விட்டது. அரசு நடத்தும் சேவை என்றால் பொது நலனே முதன்மையாக இருக்கும். ஆனால், தனியார் நடத்தும் சேவை என்றால், லாபமே முதன்மையானதாக இருக்கிறது. லாபத்துக்காக பணியாளர் குறைப்பு, செலவுச் சுருக்கம், சேவைக் குறைப்பு, இவை அனைத்தும் நடக்கும்.
இன்றைய இண்டிகோ விமான சேவைகள் ரத்துக்கு காரணம், அவர்களின் உள்ளக நிர்வாகக் கோளாறே என்றாலும், உண்மையில் இது ஓர் எச்சரிக்கை மணி.
இதே நிலைத் தொடர்ந்தால் நடுத்தர, ஏழை மக்கள் கூட உயிர்வாழ முடியாத நிலை உருவாகும். உலகளவில் இந்தியாவின் நம்பிக்கை குறையும். பொருளாதாரம் தடுமாறும்.
இந்தியாவை ‘சேவை நாடு’ என்பதிலிருந்து ‘சந்தை நாடு’ ஆக மாற்றி, தேசியச் சொத்துகளைத் தனியார் பேராசைக்கு உட்படுத்தி, மக்கள் நலனை சிந்திக்காத ஆட்சியையை மத்திய பாஜக அரசு, நடத்துகிறது. இதை கண்டிக்கிறோம். நாட்டின் அடிப்படை சேவைகள் அனைத்தும் அரசின் பொறுப்பாகவே இருக்க வேண்டும். மக்களின் நல சேவைகள் தனியாரின் பேராசைக்கு ஒப்படைக்கக் கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.