தி.வேல்முருகன்
கோப்புப் படம்
சென்னை: பாலியல் புகார் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான தவெக நிர்வாகிகள் மீது எவ்விதப் பாகுபாடுமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே தவெகவின் நிர்வாகிகள் மீது பல்வேறு அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மதுரையில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தவெக நிர்வாகி கைது, சென்னை காசிமேடு பகுதியில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வார்டு பொறுப்பாளர் கைது, தூத்துக்குடியில் பெண் கட்சி நிர்வாகிக்கு ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகாரில் கட்சி நிர்வாகிகள் மீது காவல்துறை நடவடிக்கை, கோவையில் பெண் கட்சி நிர்வாகிக்குப் பாலியல் தொல்லை, திருவள்ளூர் மாவட்டத்தில் பெண் நிர்வாகி அளித்த பாலியல் தொல்லைப் புகாரின் பேரில், பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் மீது வழக்குப்பதிவு போன்றவை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் பெற்றதாக எழுந்த புகாரில், தவெக மாவட்ட நிர்வாகி வீராசாமி கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினத்தில் 137 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், அக்கட்சியின் முன்னாள் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பூபாலன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் அனுப்பியதாகத் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர் அதனை மறுத்துள்ள நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, தமிழக காவல்துறை தலைமை இயக்குநரிடம் 7 நாட்களுக்குள் நடவடிக்கை அறிக்கை கோரியுள்ளது.
ஆளுங்கட்சியினரின் இத்தகைய செயல்பாடுகளால், தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்துப் பொதுவெளியிலும் ஊடகங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.
ஏற்கெனவே குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நிர்வாகிகளைத் தவிர, கட்சியின் பிற நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களின் செயல்பாடுகள் குறித்தும் முறையான கண்காணிப்பு அவசியம்.
குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் மீது எவ்விதப் பாகுபாடுமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பும் நீதியும் கிடைக்க வேண்டும்” என்று அதில் தெரிவித்துள்ளார்.