தமிழகம்

‘நீதிமன்றத்தின் உத்தரவை யாரும் நீர்த்துப் போகச் செய்ய முடியாது’ - திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

அத்துடன், காலம் கடந்தாலும், இன்றைக்கே தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட மனுக்களும் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அப்போது நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் இருந்து...

நீதிபதிகள்: தீபம் தொடர்​பான பிரதான வழக்கு மீது இன்று விசா​ரணை கிடை​யாது. நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்​கு​கள் மற்​றும் இடையீட்டு மனுக்​கள் தொடர்​பாக மட்​டுமே விசா​ரணை நடத்​தப்​படும். இது இரண்டை தவிர வேறு எதைக் குறித்​தும் விசா​ரிக்க மாட்​டோம், எனவே, அனைத்து தரப்பு வழக்​கறிஞர்​களும் இந்த விவகாரத்தை தாண்டி வேறு எந்த வாதங்​களை​யும் முன் வைக்க வேண்​டாம்.

மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார்: திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்​று​வதற்​கான முழு பொறுப்​பும் ஆட்​சி​யருக்கு கொடுக்​கப்​பட்​டது. இந்த விஷயத்​தில் மாவட்ட ஆட்சி​யர் பொறுப்பு அதி​காரியாக இருக்க வேண்​டும் என மிகத் தெளிவாக உச்ச நீதி​மன்​றம் கூறியும்​கூட ஆட்சி​யர் அதை வேண்டு​மென்றே நிறைவேற்​றாமல் இருந்​திருக்​கிறார்.

அறங்​காவலர் குழு​வானது ஆகம விதி​கள், மரபு​கள் என கூறி ஒரு தீர்​மானம் நிறைவேற்றி தீபத் தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற மறுத்​து​விட்​டனர். அறங்​காவலர் குழு​வுக்​கும் தீபம் ஏற்​று​வதற்​கும் எந்த தொடர்​பும் கிடை​யாது, அறங்​காவலர்​கள் அப்​படியே கூறுயிருந்​தா​லும்​கூட அதை கணக்​கில் எடுத்​துக் கொள்ள வேண்​டிய கட்​டாயம் மாவட்ட ஆட்​சி​யருக்கு கிடை​யாது

அறங்​காவலர் குழு​வின் வார்த்​தையைவிட உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தரவு குறைந்​ததா?

அறங்​காவலர் குழு​வில் மொத்​தம் 5 பேர் உள்​ளனர். அதில் இடம்​பெற்​றுள்ள ரெஜினா என்​பவர் இந்து மதத்​தைச் சேராதவர், இன்​னொரு நபர் தூணில் தீபம் ஏற்​றக்​கூடாது என போராட்​டம் நடத்​தி​ய​வர். இத்​தகைய நபர்​கள்​தான் இந்த குழு​வில் இடம் பெற்​றுள்​ளனர். அறங்​காவலர் குழு உறுப்​பினர்​களின் தீர்​மானத்தை எதையும் சரி பார்க்​காமல் ஆட்சி​யர் ஏற்​றுக் கொண்​டிருக்​கிறார். தொல்​லியல் துறை​யிடம் மாவட்ட ஆட்சி​யர் ஆலோ​சனை முறை​யாக மேற்​கொள்​ளவில்லை.

கோயி​லின் ஸ்தானிகர்​கள், அறங்​காவலர்​கள் முடிவு குறித்து தங்​களுக்கு எது​வுமே தெரி​விக்​கப்​பட​வில்லை என கூறியுள்​ளனர். தற்​போதைய அறங்​காவலர்​கள் 5 பேரை​யும் பணி​யில் தொடர் அனுமதிக்​கக் கூடாது. ஆட்சி​யர் மீது அவ​மதிப்பு நட​வடிக்கை எடுக்க வேண்​டும். கார்த்​திகை திருநாள் 11 நாட்​கள் நடை​பெறும் என்​ப​தால் மீண்​டும் தூணில் தீபத்தை ஏற்ற உத்​தர​விட வேண்​டும். இது தொடர்​பாக இடைக்​கால மனுவும் தாக்​கல் செய்​துள்​ளோம்

நீதிபதிகள்: இந்த விவகாரத்​தில் கிரி​மினல் அவ​மதிப்பு நட​வடிக்கை எடுக்​கக் கேட்​கிறீர்​களா? அல்​லது சிவில் அவ​மதிப்பு நட​வடிக்கை எடுக்​கக் கேட்​கிறீர்​களா?

மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார்: இரண்டு நட​வடிக்​கையும் எடுக்க வேண்​டும்.

தொல்லியல் துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: இந்த விவகாரத்​தில் ஒரு தரப்பு தீபம் ஏற்ற வேண்​டும் என்​றும் ஒரு தரப்பு கல்​தூணில் தீபம் ஏற்​றக்​கூடாது என்​றும் கூறுகிறார்​கள். திருப்​பரங்​குன்​றம் சுப்​பிரமணிய சுவாமி கோயில் அறங்​காவலர்​கள் அரசால் நியமிக்​கப்​பட்​ட​வர்​கள். அவர்​கள் மத நம்​பிக்கை இல்​லாதவர்​கள்.

ஆனால், தொல்​லியல் துறை​யின​ரான எங்​களு​டைய பணியை பொறுத்​தவரை நாங்​கள் என்ன செய்ய வேண்​டும் என்​பதை ஏற்​கெனவே உச்ச நீதி​மன்​றம் தெளிவாக கூறியது. அதை செயல்​படுத்த தயாராக இருந்​தோம்.

ஆனால், மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணை ஆய்வு செய்ய எங்​களை தமிழக காவல்​துறை அனுமதிக்​க​வில்லை. கடந்த 24-ம் தேதி பிற்​பகல் 3.15 மணிக்கு தொல்​லியல் துறை​யின் அதி​காரி​கள் தர்கா அரு​கில் சென்​றோம். அப்​பொழுது அங்​கிருந்த தமிழக காவல்​துறை உயர் அதி​காரி​கள், மேற்​கொண்டு எங்​களை செல்ல வேண்​டாம் என கூறி​விட்​டனர்.

பின்​னர் 4.15 மணி அளவில் கல்​தூண் அருகே செல்ல முற்​பட்​டபோது அங்கு செல்​ல​வும் காவல்​துறை​யினர் அனுமதி அளிக்​க​வில்லை. இத​னால் கல் தூணை அடையவோ, அங்​குள்ள நிலை​மையை ஆய்வு செய்​யவோ முடிய​வில்லை. மாலை 5 மணிக்கு சென்னை உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தரவு பிறப்​பித்த தகவல் கிடைத்​ததைத் தொடர்ந்து, தொல்​லியல் துறை​யினரை மலை​யி​லிருந்து வெளியேறுமாறு காவல் கண்​காணிப்​பாளர் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

ஆனாலும், தொல்​லியல் துறை​யினர் மலைப்​பகுதி​யிலேயே காத்​திருந்​தனர். அப்​போது​தான் உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி குறிப்​பிட்ட கல் தூணில் தீபம் ஏற்​று​வதற்கு இந்து சமய அறநிலை​யத்​துறையோ, சம்​பந்​தப்​பட்ட பிற துறைகளோ எந்த ஏற்​பாடுகளை​யும் மேற்​கொள்​ளவில்லை என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து, கல் தூணை ஆய்வு செய்​யாமலேயே தொல்​லியல் துறை​யினர் இரவு 7.45 மணி​யளவில் மலை அடிவாரத்​துக்கு திரும்​பியுள்​ளனர்.

இந்த ஒட்​டுமொத்த நட​வடிக்​கையும் மிகவும் தீவிர​மான நீதி​மன்ற அவ​மதிப்​புச் செய​லாகும். நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றாமல் இருப்​ப​தற்​கான ஒரு உத்​தி​யாகவே சீராய்வு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டிருக்​கலாம். அதேநேரத்​தில் சீராய்வு மனு நிலுவை​யில் இருப்​ப​தால் நீதி​மன்​றத்​தின் உத்​தரவைப் பின்​பற்ற வேண்​டிய கடமையி​லிருந்து விலக்கு கிடைத்​து​விடாது என ஏற்​கெனவே பல தீர்ப்​பு​கள் உள்​ளன.

எனவே, நீதி​மன்ற அவ​மதிப்பு குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளானவர்​களின் வாதங்​களை கேட்​ப​தற்கு முன்​பாகவே, எந்த இடத்​தில் தீபம் ஏற்ற உத்​தர​விடப்​பட்​டதோ, அதே இடத்​தில் தீபத்தை ஏற்​றச் செய்து, நீதி​மன்ற அவ​மதிப்பை நிவர்த்தி செய்ய உத்​தர​விட வேண்​டும். திருப்​பரங்​குன்​றம் மலை முழு​வதும் மத்​திய பாது​காப்​புப் படையை நிறுத்த வேண்​டும். ஓய்வு​பெற்ற உயர் நீதி​மன்ற நீதிபதி தலை​மையில் உச்ச நீதி​மன்​றத் தீர்ப்பை செயல்​படுத்த உத்​தர​விட வேண்​டும்.

மனுதாரர் வி.ராமசுப்பு தரப்பு மூத்த வழக்கறிஞர் சாய் தீபக்: அறங்​காவலர் குழு​வின் அறிக்​கையை காரணம் காட்டி உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தரவை செயல்​படுத்​தாமல் போனது அப்​பட்​ட​மான நீதி​மன்ற அவ​மதிப்பு. உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தர​வில் சில குழப்​பங்​கள் இருக்​கிறது என்று தமிழக அரசு சார்​பில் சொல்​லக்​கூடும். அதை ஏற்​கவே கூடாது.

உச்ச நீதி​மன்​றம் ஒவ்​வொரு வரியையும் மிகத் தெள்​ளத் தெளிவாக கூறி​யிருக்​கிறது. எனவே இதில் மதுரை மாவட்ட ஆட்​சி​யரின் வாதங்​களை கேட்​ப​தற்​குக்​கூட எந்த அவ​சி​யமும் இல்லை. அவர் செய்​திருப்​பது அப்​பட்​ட​மான நீதி​மன்ற அவ​மதிப்பு. நவம்​பர் 20-ம் தேதி உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வில், கோயில் அறங்​காவலர்​கள் தங்​களது விருப்​பத்​தின் அடிப்​படை​யில் முடிவெடுக்க எந்த அதி​கார​மும் வழங்​கப்​பட​வில்லை. எனவே, அறங்​காவலர்​களின் ஒப்​புதலுக்​காக மாவட்ட நிர்​வாகமும் மாநில நிர்​வாகமும் காத்​திருந்​ததே உச்ச நீதி​மன்ற உத்​தரவை மீறிய செயல்.

அரசி​யலமைப்​புச் சட்​டத்​தின் 25 மற்​றும் 26-வது பிரிவு​களின்​கீழ் தங்​களுக்கு மத உரிமை​கள் இருப்​ப​தாக அறங்​காவலர்​கள் கடைசி நேரத்​தில் கூறியுள்​ளனர். ஆனால், உச்ச நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​று​வரும் வழக்கு விசா​ரணைகளில் இதுபோன்ற உரிமையை அவர்​கள் கோர​வில்லை.

நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்ற வேண்​டிய கட்​டாயத்​தில் இருப்​பதை அறங்​காவலர்​களிடம் மாநில அரசு எடுத்​துரைத்​திருக்க வேண்​டும். அறங்​காவலர்​கள் சுயாதீனமாக முடிவெடுக்​கும் அதி​காரம் கொண்​ட​வர்​கள் என்​றும், அவர்​களின் முடிவுக்கு மாநில நிர்​வாகம் கட்​டுப்​பட்​டது என்​றும் கூறப்​பட்​டால், அறங்​காவலர்​களும் தனியாக சீராய்வு மனு தாக்​கல் செய்​திருக்க வேண்​டும்.

அறங்​காவலர்​கள் சட்​டரீதி​யாக மாநில அரசால் நியமிக்​கப்​பட்​ட​வர்​கள்; அரசின் பணி​யாளர்​கள் என்​பது முக்​கிய​மானது. எனவே, அறங்​காவலர்​களின் முடிவுக்​காக காத்​திருந்​ததையே நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றாததற்​கான காரண​மாக மாநில அரசு முன்​வைக்க முடி​யாது.

உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தரவு வரு​வதற்கு ஒரு வாரத்​துக்கு முன்​புதான் திருப்​பரங்​குன்​றத்​தில் அறங்​காவலர் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. அப்​படி என்​றால் இதுபோன்ற ஒரு உத்​தரவு வரும் என எதிர்​பார்த்து, யார், யார் அதை எதிர்ப்​பார்​களோ அவ்​வாறான நபர்​கள்​தான் அறங்​காவலர் குழு​வில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்த ஆண்டு ஒருநாள் மட்​டும் தீபம் ஏற்​றாமல் தவிர்த்து விட்​டால் உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தரவை சாதா​ரண​மாக கடந்து போய்​விடலாம் என அரசு நினைத்​திருக்​கிறது. எனவே, உடனடி​யாக குறிப்​பிட்ட தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்​தர​விட வேண்​டும். மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல்: இந்த விவகாரத்தை வெறும் தமிழகம் சார்ந்த ஒரு விஷய​மாக மட்​டும் எடுத்​துக் கொள்​ளக் கூடாது.

இந்த நாடு சட்​டத்​தின் அடிப்​படை​யில்​தான் செயல்​படு​கிறது என்​பதை உறுதி செய்​யும் வகை​யில் உச்ச நீதி​மன்​றம் உறுதி​யான நட​வடிக்கை எடுக்க வேண்​டும். நீதி​மன்​றத்​தின் உத்​தரவு​கள் செயல்​படுத்​தப்​படா​மல் போனால் என்ன மாதி​ரியான விளைவு​கள் ஏற்​படும் என்​பதை அனைவரும் தெரிந்து கொள்​ளும் வகை​யில் நீதி​மன்​றத்​தின் நட​வடிக்​கைகள் இருக்க வேண்​டும்.

மூல மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பு மூத்த வழக்கறிஞர் வள்ளியப்பன், வழக்கறிஞர் லக் ஷ்மன் ராஜா: தீபத் திருநாளுக்கு முன்​பு​கூட தமிழக அமைச்​சர்​கள் தீபத் தூணில் தீபம் ஏற்​றப்​படாது என்று பல்​வேறு சந்​தர்ப்​பங்​களில் பேசி​யுள்​ளனர். இதன்​மூலம் உச்ச நீதி​மன்ற உத்​தரவை செயல்​படுத்​தும் எண்​ணம் அவர்​களுக்கு இல்லை என்​பது தெளிவாகிறது.

இது அப்​பட்​ட​மான நீதி​மன்ற அவ​மதிப்பு ஆகும். டிசம்​பர் 15-ம் தேதி வரை கார்த்​திகை மாதம் இருக்​கிறது. இந்த மாதத்​தில் தினமும் விளக்கு ஏற்ற வேண்​டும் என்​ப​து​தான் மரபு. அந்த மரபின் அடிப்​படை​யில் டிச.15-க்​குள் எப்​போது வேண்​டு​மானாலும் குறிப்​பிட்ட தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்​தர​விட வேண்​டும்.

மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன்: உச்ச நீதி​மன்​றம் எங்​களுக்கு கொடுத்த 3 நாள் அவகாசம் இன்​று தான் நிறைவடைகிறது. ஆனாலும் உடனடி​யாக நாங்​கள் பிர​மாண பத்​திரம் தாக்​கல் செய்​ததற்கு காரணம், தீபத்​தூணில் தீபம் ஏற்​றப்​பட​வில்லை அதற்​கான காரணத்தை உடனடி​யாக நீதி​மன்​றத்​திடம் தெரி​வித்​து​விட வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான்.

நீதிபதிகள்: எங்​களது உத்​தரவை செயல்​படுத்​தினீர்​களா, இல்லையா? ஒரே வார்த்​தையில் பதில் கூறுங்​கள்.

ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர்: ஆம். செயல்​படுத்​தினோம்.

நீதிபதிகள்: அப்​படி செய்​திருந்​தால், எதற்​காக இந்த நீதி​மன்ற அவ​மதிப்பு வழக்​கு​கள் வரப்​போகிறது? இந்த விவகாரத்​தில் இன்​றைய தினமே நாங்​கள் சில முக்​கிய​மான உத்​தரவு​களை பிறப்​பிக்​கப் போகிறோம்.

ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர்: தொல்​லியல் துறை அதி​காரி​களை நாங்​கள் தீபத்​தூணின் அருகே செல்ல விட​வில்லை என்​பது பொய்​யான தகவல்.

தொல்​லியல் துறை அதி​காரி​கள் அந்த இடத்​துக்கு போனதற்கு ஆதா​ர​மாக புகைப்​படங்​களை தாக்​கல் செய்​திருக்​கிறோம். அதில் தற்​போது குற்​றச்​சாட்டு தெரி​வித்து அறிக்கை கொடுத்​துள்ள அந்த அதி​காரியும் இடம்​பெற்​றுள்​ளார்.

தொல்​லியல் துறை அதி​காரி​களு​டன் நடத்​தப்​பட்ட ஆலோ​சனை குறித்த குறிப்​பு​களை​யும், எந்த நேரத்​தில் ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது, எவ்​வாறு அவர்​களுக்கு தகவல் தெரி​விக்​கப்​பட்​டது உள்​ளிட்ட அனைத்து விவரங்​களை​யும் தாக்​கல் செய்​துள்​ளோம்.

எனவே, தொல்​லியல் துறையை கலந்து ஆலோ​சிக்​க​வில்லை, அவர்​களை மலைக்​குமேல் அனுமதிக்​க​வில்லை தீபத் தூணை ஆய்வு செய்ய அனுமதிக்​க​வில்லை என்று கூறு​வது அனைத்​தும் பொய்.

உச்ச நீதி​மன்​றம் தீபம் ஏற்​று​வதற்கு வழங்​கிய அனுமதி ஒரு தற்​காலிக ஏற்​பாடு மட்​டுமே, பாரம்​பரிய, மத அல்​லது சொத்​துரிமையை அங்​கீகரிக்​கும் வகை​யில் அந்த அனுமதி வழங்​கப்​பட​வில்லை.

மாவட்ட ஆட்சி​யர், காவல் ஆணை​யர் உள்​ளிட்ட ஒவ்​வொரு அதி​காரிக்​கும் நீதி​மன்​றம் வழங்​கிய பொறுப்​பு​கள் என்ன, அவை நிறைவேற்​றப்​பட்​டனவா என்​பதை விளக்​கு​கிறோம்.

தேவஸ்தானத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட குழு​வினர் மட்​டுமே தீபம் ஏற்ற வேண்​டும் என்று உச்ச நீதி​மன்ற உத்​தர​வில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. கோயில் செயல் அலு​வலர், தொல்​லியல் துறை மற்​றும் மதுரை மாநகர காவல் ஆணை​யருடன் ஆலோ​சித்து, தீபம் ஏற்​றும் குழு​வின் உறுப்​பினர்​கள் மற்​றும் எண்​ணிக்​கையை மாவட்ட ஆட்சி​யர் முடிவு செய்ய வேண்​டும் என்று கூறப்​பட்​டுள்​ளது.

உச்ச நீதி​மன்ற உத்​தரவை செயல்​படுத்தி விட​வேண்​டும் என்​ப​தற்​காக தீர்ப்​பின் நகல் கிடைப்​ப​தற்கு முன்​பாகவே அதற்​கான வேலைகளை தொடங்கி விட்​டோம் நவ. 20, 21, 22, 23, 24 ஆகிய தேதி​களில் என்​னென்ன கூட்​டங்​கள் நடத்​தப்​பட்​டது, அதில் என்​னென்ன விவாதங்​கள் நடத்​தப்​பட்​டது, என்​னென்ன முடிவு​கள் எடுக்​கப்​பட்​டது, யாருக்கு எப்​போது கடிதம் எழுதப்​பட்​டது, அவர்​கள் என்ன பதில் அளித்​தார்​கள் என்ற அனைத்து விவரங்​களும் வெளிப்​படை தன்​மையுடன் பிர​மாண பத்​திர​மாக நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

நீதிபதிகள்: ஆனால் நீங்​கள் என்ன செய்​தீர்​கள்? நீங்​கள்​தான் மாவட்ட ஆட்சி​யர் உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை நிறைவேற்ற வேண்​டியது ஆட்சி​யர் என்ற முறை​யில் உங்​களு​டைய பொறுப்பு. ஆனால் கோயில் நிர்​வாகம், அறங்​காவலர்​கள் உள்​ளிட்​ட​வர்​களின் கருத்​துகள் அடிப்​படை​யில் நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்​றவில்லை என கூறு​வது அரசி​யலமைப்​பின் சீர்​குலைவு என்ற சிக்​கலான நிலையை ஏற்​படுத்தி விடாதா?

ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர்: கோயில்​களில் மரபு​கள், ஆகம விதி​கள் உள்​ளிட்​டவை கடைபி​டிக்க வேண்​டும். அத​னால் கோயில் விஷயத்​தில் அனைத்​தையும் நிர்​வாக ரீதி​யாக செயல்​படுத்​தி​விட முடி​யாது.

சபரிமலை வழக்கை எடுத்​துக் கொள்​ளலாம். தற்​போது ​வரை அனைத்து வயது பெண்​களை​யும் அனுமதிக்க வேண்​டும் என்று உத்​தரவு இருக்​கிறது. அது நிர்​வாக ரீதி​யாக நிறைவேற்​றப்​பட்​டதா?

நீதிபதிகள்: இந்த வாதத்தை ஏற்க முடி​யாது. அறங்​காவலர் குழு எந்த அடிப்​படை​யில் கூடினார்​கள்?

கோயில் நிர்வாக அதிகாரி தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா: அறங்​காவலர் குழு​வினர் அவர்​களாகவே கூடினார்​கள்

நீதிபதிகள்: இல்லை. அவர்​களாக கூட முடி​யாது. அதற்​கென்று ஒரு அதி​காரி முறைப்​படி அழைப்பு விடுத்து அதன்​படிதான் அவர்​கள் கூடி ஒரு முடிவு எடுக்க முடியும். உங்​கள் சட்​டம் அதைத்​தான் சொல்​கிறது.

நிர்வாக அதிகாரி தரப்பு வழக்கறிஞர்: அறங்​காவலர் குழு மதரீதி​யில் எடுக்​கும் முடிவு​களில் நிர்​வாக அதி​காரி தலை​யிட முடி​யாது.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தரப்பு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி: உச்ச நீதி​மன்​றம் குறிப்​பிட்ட தூணில் தீபம் ஏற்ற அனுமதித்த விவகாரத்​தில் மெரிட் அடிப்​படை​யில் முடிவு எடுக்​க​வில்லை என்​ப​தால் மரபு​கள் மற்​றும் ஆகம விதி​கள் அடிப்​படை​யில் உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தரவு​களில் சில தளர்​வு​களை அறங்​காவலர் குழு தானாகவே எடுப்​ப​தற்​கான வழிவகை உரு​வாகி இருக்​கிறது.

நீதிபதிகள்: நாங்​கள் அப்​படி கூறவில்லை. குறிப்​பிட்ட தூணில் தற்​காலிக நட​வடிக்​கை​யாக தீபம் ஏற்ற வேண்​டும் என்​றுதான் தெரி​வித்​தோம். இதில் நீங்​களாக புரிந்​து​கொண்டு அதை மாற்ற முயற்​சிக்​காதீர்​கள்.

சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: அறநிலை​யத்​துறை சார்​பில் ஆஜராகி​யுள்ள மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் சிங்வி தெரி​வித்த கருத்​துகள் அடிப்​படை​யிலேயே தெரிந்​து​விட்​டது, இவர்​கள் வேண்டு​மென்​றேதான் உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தரவை செயல்​படுத்​தாமல் போயிருக்​கிறார்​கள். எனவே, எந்த தாமதமும் இல்​லாமல் இவர்​கள் மீது நீதி​மன்ற அவ​மதிப்பு நட​வடிக்கை எடுக்க வேண்​டும்.

ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர்: உச்ச நீதி​மன்​றத்​தின் உத்​தரவை பின்​பற்​று​வேன் என்​றுதான் கூறினேனே தவிர, அந்த குறிப்​பிட்ட தூணில் தீபம் ஏற்​று​வேன் என்று கூறவில்லை. ஏனென்​றால் தீபம் ஏற்​று​வது எனது பணி கிடை​யாது. எனது அதி​கார​மும் அதற்​குள் செல்​லாது.

நீதிபதிகள்: ஒரு நாளைக்கு எத்​தனை பேர் தர்​கா​வுக்கு வழிபட வரு​வார்​கள்?

தர்கா நிர்வாகம் தரப்பு வழக்கறிஞர்: நூறு முதல் 200 பேர் வரு​வார்​கள். இது தொடர்​பாக உரிய விளக்​கம் பெற்று தெரி​விக்​கிறோம்.

நீதிபதிகள்: இந்​தக் கேள்​விக்கு எந்த காரணமும் இல்லை. தகவலை தெரிந்து கொள்ள வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான் கேட்​கிறோம். யாராவது அரசி​யல் சாசன பிறழ்​வு​களை செய்ய முயற்​சித்​தார்​கள் என்​றால் நாங்​கள் அதைப் பார்த்​துக் கொண்டு சும்மா இருக்க மாட்​டோம். நீதி​மன்​றத்​தின் உத்​தரவை யாரும் நீர்த்​துப் போகச் செய்ய முடி​யாது. இவ்​வாறு வாதம் நடந்​தது. தொடர்ந்து பல முக்​கிய உத்​தரவு​களை நீதிப​தி​கள் பிறப்​பித்​தனர்.

உண்மையான கண்ணீரா? முதலைக் கண்ணீரா?

மதுரை காவல் ஆணையர் தரப்பு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிடும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாதுகாப்பு என்பது தீவிரமாக வழங்கப்பட்டது. எந்த அசம்பாவித சம்பவங்களோ, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு இல்லாமல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

24 சிறப்பு கம்பெனி படை வீரர்கள், 2,400 காவலர்கள், 1200 ஆயுதப் படை வீரர்கள், 332 ஊர்க்காவல் படை வீரர்கள், 61 டிஎஸ்பிக்கள், 130 இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 5,797 பேர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “நாங்கள் இந்த விவகாரத்தை விரிவாக விசாரிக்கிறோம், நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா அல்லது முதலைக் கண்ணீரா என்பதை நாங்கள் விசாரித்து தெரிந்துகொள்கிறோம்” என்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT