சென்னையில் நடந்த சுற்றுச்சூழல் கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். உடன் தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, தென் மண்டல பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.எல்.சுந்தரேசன், வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு. | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: இயற்கையை பாதுகாப்பது நம்மையே பாதுகாப்பதாகும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தெரிவித்துள்ளார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு சார்பில் நடந்த தென்னிந்திய அளவிலான சுற்றுச்சூழல் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
இக்கருத்தரங்கையொட்டி, சட்டக்கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருதுகளை வழங்கி பேசியதாவது: இந்தக் கருத்தரங்கில் சுற்றுச்சூழல் சட்டங்கள், திடக்கழிவு, மருத்துவக்கழிவு மேலாண்மை, கடற்கரை பாதுகாப்பு ஆகிய 3 தொழில்நுட்ப விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
மக்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கிய சுற்றுச்சூழல் உரிமையை பசுமை தீர்ப்பாயங்கள் பாதுகாக்கின்றன. இந்தத் தமிழ் மண் ஈராயிரம், மூன்றாயிரம் ஆண்டுகளாகவே காத்து நின்று, இயற்கையோடு இயைந்த வாழ்வை தமிழர்களுக்கு சொல்லித் தந்தது. இயற்கையை மறந்துவிட்ட வாழ்க்கை ஒரு நாளும் வாழ்க்கையாக இருக்க முடியாது.
இதுதான் இந்த மண்ணில் எழுந்து நின்ற அத்தனை இலக்கியங்களும் கற்றுத் தந்த பாடம். மண்ணை மறந்துவிட்ட மனிதன் தன் வாழ்க்கையில் சிறந்ததாக சரித்திரமே இல்லை. அதைத்தான் சங்க இலக்கியங்கள் கற்றுத் தந்தன.
இந்த மண்ணுக்கான இயற்கை, இந்த மண்ணின் வளம், இந்த மண்ணைச் சார்ந்த இயற்கையினுடைய காற்று, மழை அனைத்துமே நமக்கு வாழ்க்கையினுடைய முக்கியத்துவத்தை கற்றுத் தந்தன.
ஆதலினால் இயற்கையை பாதுகாப்பது நம்மையே பாதுகாப்பது, நம்மை பாதுகாப்பது, இந்த சமுதாயத்தை பாதுகாப்பது, சமுதாயத்தை பாதுகாப்பது உலகம் முழுக்க அணி திரண்டு ஒன்று சேர்ந்து இயற்கையை பாதுகாப்பது என்பதை உணர வேண்டும். இவ்வாறு பேசினார்.
பசுமை தீர்ப்பாய, தென் மண்டல அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா பேசும்போது, "சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு, பலஆண்டுகளுக்கு முன்பே பிளாஸ்டிக் ஒழிப்பு இயக்கத்தை நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியவர்.
மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தையும் செயல்படுத்தி, நாட்டிலேயே முதன் முறையாக துணிப்பை வழங்கும் ஏடிஎம்களை திறந்துள்ளார்" என்றார். சுப்ரியா சாஹூ பேசும்போது, "தமிழக அரசு பசுமை தமிழ்நாடு இயக்கம் உள்ளிட்ட 4 முக்கிய இயக்கங்களை தொடங்கியுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 10.9 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களை படித்து, அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்களின் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்றுகளை தமிழக அரசு நட்டுள்ளது. வன விலங்குகள் வாழ்வதற்கு சில குறிப்பிட்ட மரங்கள் தேவை என்பதை அறிந்த பல மரங்களை நட்டு வருகிறது" என்றார்.
இந்நிகழ்ச்சியில் பசுமை தீர்ப்பாய தலைவர் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கார்கவா, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.