தமிழகம்

உச்ச நீதிமன்றம் வழங்கியிருப்பது சட்டரீதியான ஆலோசனை மட்டுமே: திமுக வழக்கறிஞர் வில்சன்

செய்திப்பிரிவு

சென்னை: ‘உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியிருப்பது சட்ட ரீதியான ஆலோசனை மட்டுமே; இது ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு போராடிப் பெற்ற தீர்ப்பை பாதிக்காது’ என்று திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உச்ச நீதிமன்றம் தற்போது வழங்கியிருப்பது வெறும் சட்டரீதியான ஆலோசனை மட்டுமே. இது கடந்த 2023 ஏப்ரல் மாதத்தில் தமிழக அரசு ஆளுநருக்கு எதிராகப் போராடி பெற்ற தீர்ப்பை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.

உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைகள் தற்போது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதை ஏற்பதும் ஏற்காததும் குடியரசு தலைவரின் விருப்பம். இந்த ஆலோசனை உச்ச நீதிமன்றத்தையே கட்டுப்படுத்தாதபோது, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களின் செல்லுபடித்தன்மையை ஒருபோதும் பாதிக்காது.

மேலும், ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போடாமல் நியாயமான காலத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதில் காலதாமதம் ஏற்பட்டால், நீதிமன்றத்தை நாட மாநில அரசுக்கு உரிமை உண்டு. மணிப்பூர் வழக்குத் தீர்ப்பின்படி, இந்த காலஅவகாசம் 3 மாதங்களாகக் கருதப்படலாம். ஆளுநர், மக்களின் எண்ணங்களுக்கு மாறாக மீண்டும் மசோதாக்களைத் தாமதப்படுத்தினால், முந்தைய தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு மீண்டும் நீதிமன்றத்தை நாடும். இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் தலைவர்கள் கருத்து: இதற்கிடையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:

திமுக எம்பி கனிமொழி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தனது மக்களுக்கான உரிமைகளைக் காத்திடவும், மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டப்பேரவையில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. இன்று உச்ச நீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: மாநில சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை, எந்த காரணமும் கூறாமல் ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு,இந்திய கூட்டாட்சித் தத்துவத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆதாரக் கொள்கைகளையும் வலுவாக உறுதிப்படுத்துகிறது. மாநில அரசின் செயல்பாடுகளை தாமதப்படுத்தும் அல்லது தடைசெய்யும் நோக்கத்துடன் ஆளுநர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன்: குடியரசுதலைவருக்கோ, ஆளுநர்களுக்கோ சட்ட மசோதாவை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று யாருமே கட்டாயமாக உத்தரவிட முடியாது. அது ஜனநாயகவிரோதம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம், சிலவழிகாட்டுதல் மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். அதாவது, தாமதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மாநில அரசு எங்களிடம் இதுதொடர்பாக வழக்கு தொடரும்போது, விசாரிக்க வேண்டியது எங்களது கடமை. விசாரித்து கருத்து சொல்ல எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இதை செய்துதான் ஆகவேண்டும் என கட்டாயப்படுத்த முடியாது என்பதையும் நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருக்கிறது.இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.

SCROLL FOR NEXT