அன்புமணி

 

கோப்புப் படம்

தமிழகம்

“கனிமவளக் கடத்தலை தடுக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு அவசியம்” - அன்புமணி

தமிழினி

சென்னை: “கனிமவளக் கடத்தல் தடுப்பு ஆணையை ரத்து செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் வெட்டி எடுக்கப்படும் கருங்கல் ஜல்லி, தாதுமணல் உள்ளிட்ட கனிமவளங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தமிழகத்தின் மிக முக்கியமான கனிமவளங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கையை உயர் நீதிமன்றம் செல்லாததாக்கியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெட்டி எடுக்கப்படும் கனிமவளங்கள் சட்டவிரோதமாக பிற மாநிலங்களுக்கு, குறிப்பாக கேரளத்துக்கு கடத்திச் செல்லப்படுவது கடந்த சில ஆண்டுகளாக எல்லையில்லாமல் அதிகரித்து வருகிறது.

அதைத் தடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கனிமவளங்களை புதுச்சேரி தவிர்த்த பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 3 மாதத் தடை விதித்து ஜூலை 27-ஆம் நாள் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து குவாரி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் தான் உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

இந்தத் தீர்ப்பு தமிழக நலன்களுக்கு எதிரானது. மத்திய அரசின் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957இன் 15, 23 (சி) ஆகிய பிரிவுகளில் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக கனிமவளங்கள் சட்டவிரோத வெட்டியெடுப்பு, போக்குவரத்து மற்றும் இருப்பு வைத்தல் தடுப்பு மற்றும் கனிம வணிகர்கள் விதிகளில் 3 ஏ என்ற பிரிவை சேர்த்து, அதனடிப்படையில் தான் தமிழக அரசு இந்தத் தடையை விதித்தது.

இந்தத் தடை இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 301, 302, 304 (பி) ஆகிய பிரிவுகளுக்கு எதிராக இருப்பதால் செல்லாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, மத்திய அரசு சட்டத்தின் 15, 23 (சி) ஆகிய பிரிவுகள் மதிப்புமிக்க பெருங்கனிமங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், கருங்கல் ஜல்லி போன்ற மதிப்பு குறைந்த கனிமங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேற்கண்ட இரு விஷயங்கள் குறித்த உண்மை நிலையை உயர்நீதிமன்றத்திற்கு தமிழக அரசு தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு அரிசி கடத்தப்படுவதைத் தடுக்க தமிழ்நாடு அரிசி (போக்குவரத்தைக் கட்டுப்படுத்துதல்) ஆணை 1982 இல் 3(1ஏ) என்ற பிரிவை சேர்த்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட கே.இராமநாதன் எதிர் தமிழக அரசு வழக்கில் 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அத்தியாவசியப் பொருள்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என்று கூறியுள்ளது.

இது இப்போது பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கும் பொருந்தும் என்பதற்கான வலிமையான வாதங்களை தமிழக அரசு முன்வைத்து நிரூபித்திருக்க வேண்டும்.

அதேபோல், கனிமவளங்கள் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுப்பதற்காகத் தான் இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தமிழக அரசு வலிமையாக நிரூபித்திருக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளும், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டமும் சட்டப்படி வெட்டியெடுக்கப்பட்ட கனிமங்கள் நாட்டின் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுவதைத் தான் அனுமதிக்கின்றன.

ஆனால், தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு கொண்டு செல்லப்படும் கனிமங்கள் அனைத்தும் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுபவையும், ஒரு முறை மட்டுமே கேரளத்திற்கு கனிமங்களைக் கொண்டு செல்வதற்காக பெறப்பட்ட அனுமதிச்சீட்டை பயன்படுத்தி பத்துக்கும் மேற்பட்ட முறை கனிமங்களைக் கடத்திச் செல்கின்றன. அதுமட்டுமின்றி, அவ்வாறு கடத்திச் செல்லப்படுவதில் பெரும்பான்மையான கனிமவளங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டவை ஆகும்.

எடுத்துக்காட்டாக, 2022 ஆம் ஆண்டில் நெல்லை மாவட்ட குவாரிகலில் நடத்தப்பட்ட 24 குவாரிகளில் மட்டுமே கிட்டத்தட்ட 50 லட்சம் கன மீட்டருக்கும் மேலான சாதாரண கற்கள் மற்றும் கிட்டத்தட்ட 5.5 லட்சம் கன மீட்டருக்கும் மேலான கிராவல் கற்களும் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப் பட்டுள்ளன என்பதும் கண்டறியப்பட்டது.

இவற்றையெல்லாம் தடுப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கையாகத் தான் இத்தடை விதிக்கப்பட்டது என்பதையும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. கனிமவளக் கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஏற்பட்ட பின்னடைவுக்கு இதுவும் காரணமாகும்.

தமிழகத்தில் கனிமவளக் குவாரிகள் அமைப்பதற்கு உரிமங்கள் வழங்கப்பட்டதற்கான காரணம் தமிழகத்தின் கட்டுமானத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகத் தானே தவிர, கடந்த காலங்களில் ஆட்சியாளர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த சிலர், கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கடத்திச் சென்று தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்காக அல்ல.

இதை உணர்ந்து கனிமவளங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை செல்லுபடியாகும் என்றத் தீர்ப்பை அரசு பெற்றிருக்க வேண்டும். ஆனால், அதில் தமிழக அரசு தோற்றுவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு கனிமவளங்கள் கடத்தப்படுவது உடனே தொடங்கி விடும். இதை அரசு அனுமதிக்கக் கூடாது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தான் அதற்கானத் தீர்வு.

அதை தமிழக அரசு செய்யும் என்று கனிமவளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு கூறியிருப்பது சரியானது. அதை செய்வது மட்டுமின்றி, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உடனடியாக இடைக்காலத் தடை பெறவும், வலிமையான வாதங்களை முன்வைத்து கனிமவளக் கடத்தலைத் தடுப்பதற்காக தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் சில சாதகமான அம்சங்களும் உள்ளன. குவாரி உரிமம் பெற்று சட்டப்பூர்வமாக வெட்டி எடுக்கப்பட்ட கனிமங்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடை தான் நீக்கப்பட்டிருக்கிறதே தவிர, புதிய உரிமங்களை வழங்கும் போது, வெட்டியெடுக்கப்படும் கனிம வளங்களுக்கு அதிகபட்ச வரம்பு நிர்ணயித்தல் உள்ளிட்ட நியாயமான கட்டுப்பாடுகளை, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின் 4(ஏ) பிரிவை பயன்படுத்தி விதிக்க முடியும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தில் கனிமக் கொள்ளையை இயன்றவரை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT