மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
சென்னை: நியாயமான தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக திமுக அறிவித்துள்ளது. மேலும், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரையொட்டி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக வெளியிட்டுள்ள அந்த தீர்மானத்தில், ‘திமுகவை வழிநடத்தும் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திராவிட மாடல் அரசுதான், தொகுதி மறுவரையறை என்ற பேச்சு எழுந்த உடனேயே முதலில் எதிர்ப்பு குரல் எழுப்பியது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களைப் பாதிக்கின்ற வகையிலான தொகுதி மறுவரையறைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தோம்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.2.2024 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ‘தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள் தொகை அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளதோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினோம்.
‘மக்கள் நலன் கருதி, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாகப் பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களையும், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காகத் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்றும் அந்தத் தீர்மானம் மூலம் வலியுறுத்தினோம்.
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு மட்டுமல்ல, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக நிறைவேற்றிய எந்த மாநிலமும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என ஆணித்தரமான நடவடிக்கைகளை ஆட்சியிலிருந்தபோதே முன்னெடுத்ததை, இந்தக் கூட்டம் நினைவுகூர விரும்புகிறது.
தொகுதி மறுவரையறையினால் நம் மாநிலத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு 25.2.2025 அன்று தமிழ்நாடு அமைச்சரவையின் கூட்டத்தைக் கூட்டி, ஆலோசனை செய்து, அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 5.3.2025 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில், ‘நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்போதைய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
தொகுதி மறுவரையறையின் காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது’ என்பதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம்.
ஆனால், கொள்கைகளைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு, கள்ளத்தனமாக நள்ளிரவில் கூட்டணியிலிருந்து எகிறிக் குதித்து, பதவிக்காக வேறுபக்கம் தஞ்சம் அடைந்தது காங்கிரஸ் கட்சி. அப்படிப்பட்டவர்கள் இப்போது, திராவிட முன்னேற்றக் கழகம் ஏதோ இரட்டை நிலைப்பாடு எடுத்துவிட்டதுபோல் பொய்ப்பிரசாரம் மேற்கொள்வது ஏற்புடையதல்ல’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தீர்மானத்தை விளக்கி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் எம்பியும் மூத்த தலைவருமான ஆ.ராசா, “50% அதிகமாக இடங்களை வழங்குவது என்ற நிலைக்கு திமுக ஆதரவை வழங்குவது என தீர்மானித்திருக்கிறோம். இது இன்று எடுக்கப்பட்ட முடிவு அல்ல. மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது, சட்டமன்றத்தில் அவர் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார். அந்த தீர்மானத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடு என்ன முடிவை எடுத்தோமோ, அந்த முடிவுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சித் தலைவர்களையும் முதல்வர்களையும் சென்னைக்கு அழைத்து ஒரு கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து, அந்த குழு ஒரு நாள் முழுவதும் விவாதித்து, என்ன முடிவு எடுத்தோமோ அந்த முடிவுக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு கொண்டு வந்த தீர்மானத்தில் அதே பங்களிப்பு குறையக் கூடாது என்ற எங்கள் கருத்தை வலியுறுத்தி, தொடர்ச்சியான, நீடித்த முடிவை திமுக எடுத்தது. இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் 1971ல் இறுதியாக நடந்த தொகுதி மறுவரையறையின்போது தமிழ்நாட்டுக்குக் கிடைத்த 7.18% பங்களிப்பு குறையாமல் நியாயமான தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம்.
இண்டியா கூட்டணி உட்பட அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எடுக்கப்பட்ட முடிவின்படியே இன்று இந்த முடிவை எடுத்துள்ளோம்.
திமுக கூட்டணியில் இல்லை என்பதற்காக வலிந்துபோய் ஏதோ ஒரு புதிய முடிவை எடுத்ததுபோல சித்தரிப்பது என்பது மிகக் கேவலமான, அருவருப்பான செயல். அது அரசியல் நாகரிகம் அல்ல.
1971-ல் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டபோது தமிழகத்துக்கு எண்ணிக்கை 2 குறைந்தது. இப்போது அதுபோன்ற இழப்பு ஏதும் கிடையாது. 7.18-க்குப் பதிலாக, மிகச்சரியாக 7.21% என்ற அளவிலே கிடைத்திருக்கிறது. எனவே, இதில் இழப்பு இல்லை.
மசோதாவில் உள்ள வேறு பிரிவுகளில் சில குறைபாடு இருப்பதாக சிலர் சொல்லி இருக்கிறார்கள். அதை தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் விவாதித்திருக்கிறோம். எங்கெல்லாம் பிரச்சினை இருக்கிறதோ, அது தொடர்பாக அனைத்துக் கட்சிகளோடு சேர்ந்து தேவைப்பட்டால் திருத்தம் கோரலாமா என்பது குறித்த முடிவை எங்களிடமே தலைவர் விட்டுள்ளார். அது குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் விரிவாகப் பேசுவோம்.
59 என்ற எண்ணிக்கை எங்களுக்கு உடன்பாடு. மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறை இருக்காது. எனவே, இந்த மசோதாவால் இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இருக்காது. தொகுதி மறு சீரமைப்பு செய்யும்போது, மத சிறுபான்மை மற்றும் மொழி சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமானால், அப்போது நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்து நடவடிக்கைகளை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.