சுந்தர் சி
மதுரை; ‘‘ஒரு பாரம்பரிய குடும்பத்துக்கு தொடர்ந்து இரு முறை வாய்ப்பு கொடுத்தது போதும்’’ என்று மதுரை மத்திய தொகுதியில் பிரச்சாரம் செய்த அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி தெரிவித்தார்.
மதுரை மத்திய தொகுதியில் பிரச்சாரம் செய்த அவர், “மதுரை மத்திய தொகுதியில் கழிப்பிட அறைகள், சமுதாய கூடம், ரேஷன் கடைகள் கட்டியதை பழனிவேல் தியாகராஜன் சாதனையாக சொல்கிறார். ஒரு அமைச்சரின் சாதனையா இது? தான் படித்தவர், பண்பாளர் என்று கூறி கொள்ளும் அவர், மத்திய தொகுதிக்கு ஒரு அமைச்சராக எவ்வளவு நல்ல காரியங்கள் செய்திருக்கலாம். மீனாட்சியம்மன் கோயிலுக்கு எத்தனை ஆயிரம் கோடி ஜிடிபி மட்டும் வருகிறது.
அந்த கோயிலுக்கு எதுவும் செய்யாமல், கவுன்சிலர்கள் செய்ய வேண்டிய காரியங்களை இவர் செய்ததாக பெருமை கொள்கிறார். தான் கேட்கிற கேள்விகளுக்கு அவரால் நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை. மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் சம்பந்தப்பட்ட மேயர் கணவர் பொன்வசந்ததிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு? அவரை போலீஸார் ஏன் கைது செய்தனர்? பதவியிழந்த இந்திராணியை மேயராக பதவியில் அமர வைத்தது யார்? மாநகராட்சி சொத்துவரி முறைகேட்டில் இவரது ஆதரவு கவுன்சிலர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெய் பாலாஜி யார்? அவர் யாருடைய வலது கை?.
வெளிநாட்டில் தலைமறைவாக சுற்றிக்கொண்டிருக்கிறாரே லட்சுமணன், அவர் யாருடைய ஆள்? இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் என்னை பற்றி தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்.
கபடதாரி, பச்சோந்தி, சினிமா சங்கி என்று என்னைப் பற்றி கூறுகிறார். என்னை கூத்தாடி என்கிறீர்கள். உங்கள் துணை முதல்வர் உதயநிதி, சினிமாவில் இருந்துதான் அரசியலுக்கு வந்துள்ளார். உங்களுக்கு தைரியம் இருந்தால் அவரை பார்த்து சொல்லுங்கள்.
வார்த்தைக்கு வார்த்தைக்கு படித்தவன், படித்தவன் என்று சொல்லிட்டு என்னை படிக்காதவன் என்று இகழ்கிறார். காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா படிக்கவில்லை. ஏன் உங்கள் தலைவர் கருணாநிதிகூட படிக்கவில்லை. படிப்பு ஒருவரின் திறமையையும், தகுதியையும் நிர்ணயித்துவிடாது. ஒருவரின் செயல்பாடுகளும், நடத்தையையும்தான் அவரது தகுதியை நிர்ணயிக்கும். இதுவரை உங்களை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லாத நீங்கள், இப்போது எனக்கு மட்டும் ஏன் பதில் சொல்கிறீர்கள். ஏன் என்றால், நான் கேட்பது என்னுடைய கேள்வி அல்ல.
அது மதுரை மக்கள் உங்களை நோக்கி வைக்கும் கேள்விகள். படித்தவர், படித்தவர் என்று சொல்கிறீர்கள், பிறகு எதற்கு உங்களை நிதியமைச்சர் பதவியில் இருந்து தூக்கி சாதாரண துறைக்கு மாற்றினார்கள். அதற்கு பதில் இருக்கிறதா உங்களிடம்? ஏன் உங்களுக்கு தகுதியில்லை என்பதாலா?
ஒரு நிதிமைச்சராக, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக ஐந்து ஆண்டுகள் இருந்துவிட்டு தொகுதிக்கு பெரிய திட்டங்களை கொண்டு வராமல் என்னை திட்டுகிறார்.
என்னை எவ்வளவு விமர்சித்தாலும் நான் உங்களை போல் விமர்சிக்க தயாரில்லை. நான் என்னுடைய படங்களில் நடிகர்களுக்கு எத்தனையோ பட்டபெயர்கள் வைத்துள்ளேன். பழனிவேல் தியாகராஜன் என்னை ‘சினிமா சங்கி’ என்று பட்ட பெயர் வைத்துள்ளார். திருப்பி உங்களுக்கு நான் பட்ட பெயர்வைப்பதற்கு ஒரு நிமிடம் ஆகாது. அந்தளவுக்கு தரம் தாழ்ந்து நான் போக மாட்டேன். படித்தவர், படித்தவர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் உங்கள் படிப்புக்கு தகுந்தவாறு நடந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. ஒரு பாரம்பரிய குடும்பத்திற்கு தொடர்ந்து இரு முறை வாய்ப்பு கொடுத்தது போதும். முதல் முறை எம்எல்ஏ ஆக இருந்து இரண்டாவது முறை தேர்தலை சந்தித்தபோது எதிர்க்கட்சியாக இருந்ததால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார். அது நியாயம். மீண்டும் அவருக்கு வாக்களித்து இரண்டாவது முறை ஜெயிக்க வைத்தீர்கள். தற்போது இரண்டாவது முறையாக வந்து நின்றபோது, நினைத்ததை செய்ய முடியவில்லை என்று நிற்கிறார்” இவ்வாறு அவர் பேசினார்.