மதுரை: மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி, திமுக வேட்பாளரும் அமைச்சருமான பழனி வேல் தியாகராஜனை வெற்றி கொள்வது தொடர்பாக அடுத்த 20 நாட்களுக்கான தேர்தல் பிரச்சார வியூக ஸ்கிரிப்ட் தயார் செய்து வருகிறார்.
மதுரை மத்திய தொகுதியில் 3-வது முறையாக திமுக வேட்பாளராக களம் இறங்குகிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். தொகுதிக்குள் திமுக நிர்வாகிகளிடையே பல்வேறு விஷயங்களில் முரண்பாடு நிலவுகிறது.
அதிமுகவில் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், பேராசிரியர் ஜெயபால் உள்ளிட்டவர்கள் அதிக பணம் செலவு செய்து போட்டியிட தயாராக இருந்தனர். ஆனால், திடீரென அதிமுக கூட்டணியில் இந்த தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் சோர்வு அடைந்தனர்.
ஆனால், யாருமே எதிர்பாராத திருப்பமாக, புதிய நீதிக் கட்சியில் பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
சுந்தர் சி, பாஜக முக்கிய நிர்வாகியான நடிகை குஷ்புவின் கணவராகவும் இருப்பதால் அக்கட்சியினரின் ஆதரவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதால் அதிமுகவினர் ஒத்துழைப்பும், புதிய நீதிக் கட்சியின் சமூகரீதியான ஆதரவும், சினிமா பிரபலமும் கைகொடுக்கும் என்பதால் சுந்தர்.சி, பழனிவேல் தியாகராஜனுக்கு கடும் போட்டி கொடுக்கும் வேட்பாளராக பார்க்கப்படுகிறார்.
அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தரப்பினர், இந்த முறை வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டியது இருக்கும். இதுகுறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறுகையில், சுந்தர்.சி, வேட்பாளராக அறிவிக்கப் பட்டவுடனேயே அவர், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உள்ளிட்ட மதுரை மாநகரை சேர்ந்த முக்கிய அதிமுக நிர்வாகிகளிடம் தொலைபேசியில் பேசி, மத்திய தொகுதிக்குட்பட்ட முக்கிய பிரச்சனைகள், பழனிவேல் தியாகராஜனை வெற்றிபெற என்ன செய்யலாம், அவருக்கு எதிராக தொகுதியில் உள்ள பிரச்சினைகள் போன்றவற்றை கேட்டு குறிப்பெடுத்துள்ளார்.
மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்களான முன்னாள் மேயர் இந்திராணி, மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி உள்ளிட்டவர்கள் பதவியை இழந் துள்ளனர்.
மேலும், இந்திராணி கணவர் பொன்வசந்த், பழனிவேல் தியாகராஜனின் உதவியாளர் ஜெய் பாலாஜி போன்றவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்ட விவரங்களையும், சுந்தர் சி-யிடம் அதிமுகவினர் கூறியுள்ளனர்.
பழனிவேல் தியாகராஜனுக்கு எதிரான அனைத்து விவகாரங்களையும் கவனமாக கேட்டுக்கொண்ட அவர், தற்போது இந்த தகவல்களை உள்ளடக்கி அடுத்த 20 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும், பழனிவேல் தியாகராஜனுக்கு எதிரான வியூகம் அமைப்பதற்காக தனது உதவியாளர்கள் மூலம் 'தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட்’ தயார் செய்ய கூறியுள்ளார்.
20 நாட்கள் பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தனி ‘ஐடி டீம்’ அமைத்துள்ளார். மனைவி குஷ்புவையும், மகள்களையும் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறக்க சுந்தர்.சி திட்டமிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு முஸ்லிமாகவும் இருப்பதோடு, பாஜகவின் முக்கிய நிர்வாகி மற்றும் வடமாநிலத்தை சேர்ந்தவராகவும் இருப்பதால் உருது, இந்தி பேசி முஸ்லிம்கள், வடமாநிலத்தவர்களிடம் வாக்கு சேகரிக்க உள்ளார். மத்திய தொகுதியில் முஸ்லிம்கள், வட மாநிலத்தவர்கள் அதிகம் உள்ளதால் நடிகை குஷ்புவின் பிரச்சாரம் எடுபடும், என்றனர்.