கரூர்: தவெக கூட்ட நெரிசல் விசாரணை தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று (டிச.29) நடைபெற உள்ள விசாரணைக்கு ஆஜராக கரூர் ஆட்சியருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று (டிச.29) நடைபெறும் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாநில இணைச் செயலாளர் சிடிஆர்.
நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்தன், டிஎஸ்பி செல்வராஜ், கரூர் நகர ஆய்வாளர் ஜி.மணிவண்ணன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் ஆட்சியர் மீ.தங்கவேல் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.