தமிழகம்

வெயில் தாக்கம்: புதுச்சேரி, காரைக்காலில் ஏப்.27 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

செ.ஞானபிரகாஷ்

சென்னை: கோடை வெயிலின் தாக்கத்தால் வரும் 27-ம் தேதி முதல் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு கல்வித் துறை விடுமுறை அறிவித்துள்ளது. வரும் ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை அரசு பள்ளிகள் செயல்படுத்தி வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டில், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி வகுப்புகள் தொடங்கியது. சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. இதனால் புதுவையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, பின்னர் பள்ளிகள் இயங்கி வந்தன.

அதே நேரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து விடுமுறை விட அரசு தரப்பை பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் சிவகாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடையில் வெப்பத்தின் தாக்கத்தால் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவற்றுக்கு வரும் 27-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும்.

இக்காலங்களில் சிறப்பு வகுப்புகள் பள்ளிகளில் நடத்தக்கூடாது. வரும் ஏப்ரல் 27 முதல் 30-ம் தேதிவரை விடுமுறை விடப்படுவதால் பள்ளி திறப்புக்கு பிறகு இந்நாட்கள் ஈடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT